ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில்; 2 பேர் சரண்
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் தேடப்பட்ட 2 பேர், நெய்வேலி கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.
நெய்வேலி,
விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்ற கோதண்டராமன் (வயது 42), ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 21-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஆரோவில் பகுதிக்கு சென்றுவிட்டு பாபு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசியும், ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியும் பாபுவை படுகொலை செய்தது.
இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குயிலாப்பாளையத்தில் ராஜ்குமார் மற்றும் தாதா மணிகண்டன் ஆகிய ரவுடி கும்பல்களுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலில் ராஜ்குமார் ஆதரவாளரான பாபு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சஞ்சீவி ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பிரபல ரவுடி தாதா மணிகண்டன் கூட்டாளிகளான பெரியமுதலியார் சாவடி பச்சையப்பன், அய்யப்பன், குயிலாப்பாளையம் மணிகண்டன் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை தேடி வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு கோர்ட்டில் பச்சையப்பன், அய்யப்பன், மணிகண்டன் ஆகிய 3 பேர் சரணடைந்தனர்.
இந்த நிலையில் பாபு கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி வானூரை சேர்ந்த சீனிவாசன் மகன் அருள்(35), புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த திராவிடமணி மகன் அருள்செல்வன்(25) ஆகிய 2 பேர், கடலூர் மாவட்டம் நெய்வேலி கோர்ட்டில் நீதிபதி ரோஸ்கலா முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். இவர்களை 15 நாள் சிறை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story