டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.3 லட்சம் கொள்ளை


டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.3 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 1 Aug 2018 3:30 AM IST (Updated: 1 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

முத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு பணம் கட்ட சென்ற டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் மீது பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி ரூ.3¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

முத்தூர்,


இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மலையாத்தாபாளையம் ஓடை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பெருமாள்புதூரை சேர்ந்த கார்த்திக் (வயது 36) என்பவர் பணியாற்றி வருகிறார். அதேபோல் மலையாத்தாபாளையம் ஓடை அருகே செட்டிக்காட்டு தோட்டம் பகுதியில் மற்றொரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் வேட்டாங்காட்டு வலசை சேர்ந்த தனபால் (36) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்த 2 டாஸ்மாக் கடைகளிலும் வசூலாகும் தொகையை கார்த்திக் ஒருநாளும், தனபால் மற்றொருநாளும் நத்தக்காடையூரில் உள்ள வங்கிக்கு கொண்டு சென்று செலுத்தி வருகிறார்கள். அதன்படி நேற்று கார்த்திக் பணம் செலுத்தும் முறையாகும்.

இதையடுத்து மலையாத்தாபாளையம் ஓடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வசூலான தொகை ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 580-ஐ கார்த்திக் எடுத்துக்கொண்டு செட்டிக்காட்டு தோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் அந்த கடையில் வசூலான தொகை ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 320-ஐ தனபாலிடம் வாங்கிக்கொண்டு மொத்தம் ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 900-ஐ மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு நத்தக்காடையூரில் உள்ள வங்கிக்கு நேற்று மதியம் சென்று கொண்டிருந்தார்.

முத்தூர்-நத்தக்காடையூர் பிரிவு வெள்ளிங்காடு காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது கார்த்திக்கை 25 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை பார்த்ததும், கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகப்படுத்தினார். ஆனாலும் அந்த ஆசாமி வேகமாக சென்று, கார்த்திக் அருகே வந்ததும், தான் கையில் வைத்து இருந்த மிளகாய் பொடியை கார்த்திக்கின் கண்களில் தூவினார். இதனால் நிலை தடுமாறிய கார்த்திக், மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்தார். அப்போது அந்த ஆசாமி, கார்த்திக்கை தாக்கியதோடு எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய கார்த்திக், மோட்டார் சைக்கிளுடன் சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஆசாமி, கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து இருந்த ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 900-ஐ கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்து கிடக்கும் கார்த்திக்கை மீட்டனர். அப்போது அவர்களிடம் நடந்த விவரத்தை கார்த்திக் கூறினார். இதையடுத்து அவரை முத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமியின் மோட்டார் சைக்கிளின் பதிவு எண் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். பட்டப்பகலில் டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story