மணல் கடத்தலை தடுத்த வனத்துறை அதிகாரிகளை டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி
பெரியபட்டணம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது வனஅதிகாரியை டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர்பாட்சா உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் வேட்டைதடுப்பு காவலர்கள் பெரியபட்டணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திராநகர் கடற்கரை பகுதியில் பதிவு எண் இல்லாமல் ஒரு டிராக்டர் மணல் அள்ளி வந்தது. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்ற போது, டிராக்டர் டிரைவர் அதை நிற்காமல் ஓட்டி சென்றதுடன் ராஜேந்திரன் உள்பட அதிகாரிகள் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றாராம்.
இதில் வனத்துறையினர் அதிர்ஷ்டவசமாக தப்பியதுடன், நிற்காமல் சென்ற டிராக்டரை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் டிராக்டர் வேகமாக பெரியபட்டணம் பகுதிக்குள் சென்று, அங்கு மணலை கீழே கொட்டிவிட்டு டிராக்டரை டிரைவர் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். டிராக்டரை பறிமுதல் செய்த வனத்துறையினர் இதுகுறித்து திருப்புல்லாணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமீனாள் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர்.
அதில் பெரியபட்டணம் தங்கையா நகரை சேர்ந்த அழகுலிங்கம் மகன் முனியசாமி என்பவருக்கு சொந்தமான டிராக்டர் என்பதும், அதை பெருங்குளத்தை சேர்ந்த கலைச்செல்வம் என்பவர் ஓட்டி வந்ததும் தெரிந்தது. அதைத்தொடர்ந்து வனக்காப்பாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடிவருகின்றனர். இதுகுறித்து கீழக்கரை வனச்சரகர் கூறியதாவது:– வனத்துறை அலுவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கனிமவள கண்காணிப்பு குழுவில் தாலுகா அளவில் வனச்சரகரும் உறுப்பினர் என்பதால் சந்தேகத்திற்கு இடமான முறையில் மணல் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் டிராக்டரை ஓட்டி வந்த நபர் வனத்துறையினரை டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்று தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.