பட்டய கணக்கு படிப்பதற்காக என்ஜினீயரிங் வேலையை தியாகம் செய்தேன், அகில இந்திய அளவில் 2–வது இடம் பிடித்த மாணவர் பேட்டி


பட்டய கணக்கு படிப்பதற்காக என்ஜினீயரிங் வேலையை தியாகம் செய்தேன், அகில இந்திய அளவில் 2–வது இடம் பிடித்த மாணவர் பேட்டி
x
தினத்தந்தி 1 Aug 2018 4:30 AM IST (Updated: 1 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

பட்டய கணக்கு படிப்பதற்காக என்ஜினீயரிங் வேலையை தியாகம் செய்தேன் என்று அகில இந்திய அளவில் 2–வது இடம் பிடித்த கோவை மாணவர் கூறினார்.

கோவை,

அகில இந்திய பட்டய கணக்காளர் (சி.ஏ.) படிப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த 29–ந் தேதி வெளியிடப்பட்டன. இதில் கோவை ராம்நகரை சேர்ந்த மாணவர் லட்சுமணன் (வயது 25) 700–க்கு 502 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 2–வது இடம் பிடித்து உள்ளார். இது 71.71 சதவீதம் ஆகும். பட்டய கணக்காளர் தேர்வில் 2–வது இடம் பிடித்தது குறித்து மாணவர் லட்சுமணன் கூறியதாவது:–

எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி ஆகும். எனது தந்தை அரசு. தொழில் தொடர்பாக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தார். தற்போது எனது தந்தை நிதி நிறுவன ஆலோசகராக உள்ளார். நான் துடியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2010–ம் ஆண்டு பிளஸ்–2 படிப்பை முடித்தேன்.

எனக்கு சிறுவயதில் இருந்தே மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போன்று விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு இருந்தது. ஆனால் என்னால் அந்த கனவை நிறைவேற்ற முடியவில்லை. ஆனாலும் அவர் கூறிய இளைஞர்களே கனவு காணுங்கள் என்ற சொல் எனது மனதில் ஆழமாக பதிந்தது.

இதையடுத்து நான் வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா என்ஜினீரிங் கல்லூரியில் பி.இ., படிப்பை கடந்த 2014–ம் ஆண்டு படித்து முடித்தேன். அதன்பின்னர் சென்னை மகேந்திரா சிட்டியில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக 2½ ஆண்டுகள் பணியாற்றினேன். இந்தநிலையில் எனது தங்கை பட்டய கணக்கு படிப்பை தேர்வு செய்து படித்தார். எனது தந்தையும் பட்டய கணக்குதான் படித்து உள்ளார். எனவே எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் பட்டய கணக்கு படித்தவர்களாகவே இருக்கவேண்டும் என்று எனக்குள் தோன்றியது.

இதுதொடர்பாக எனது தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர், தேடலும், முயற்சியும் இருந்தால் எதிலும் சாதிக்கலாம் என்று கூறினார். இதனை தொடர்ந்து பட்டய கணக்கு படிப்பதற்காக எனது வேலையை தியாகம் செய்தேன். இந்த படிப்பு குறித்து ஆரம்பத்தில் எனக்கு எதுவுமே தெரியாது. இதற்காக நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து சி.ஏ. இன்டர்மீடியா பிரிவில் பழைய பாட பகுதியை எடுத்து படித்தேன்.

நான் ஏற்கனவே ஒரு டிகிரி படித்து இருந்ததால் சி.ஏ. பவுண்டேசன் பிரிவு தேர்வு எழுத வேண்டியது இல்லை. நேரடியாக 2–வது கட்டமான தேர்வை எதிர்கொள்ளலாம். இந்த தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 2–வது இடம் பிடித்து உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை தொடர்ந்து நான் 1½ ஆண்டுகள் ஆடிட்டர்களிடம் பயிற்சி பெற்று இறுதி தேர்வை எதிர்கொள்வேன்.

வாழ்க்கையில் வெற்றி என்பதுதான் அனைவரின் இலக்கு. ஆனால், அதனை எட்டிப்பிடிக்க பலருக்கு வழி தெரிவதில்லை. சிலர் தங்களுடைய குறைகளை நினைத்து அழுகிறார்கள். இன்னும் சிலர் தங்களின் குறைகளை மறைத்து புலம்புகிறார்கள். இவர்களின் முயற்சியில் எங்கோ, ஏதோ ஒரு குறை இருப்பதால்தான் சறுக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. முன்னேற்றத்தில் தடை ஏற்படுகிறது. வெற்றிக்கு முதல் படி நம்பிக்கைதான். நம்பிக்கையை இழக்காமல் முழு முயற்சியுடன் எதிர்கொண்டால் வெற்றி இலக்கை எளிதில் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் இந்த படிப்பில் சி.ஏ. இன்டர்மீடியா புதிய பாட பிரிவில் துடியலூரை சேர்ந்த மாணவர் பரத் ராம் 49–வது இடமும், சி.ஏ. பவுண்டேசன் பிரிவில் அகில இந்திய அளவில் கோவை வேடப்பட்டியை சேர்ந்த மாணவர் விக்னேஷ் 21–வது இடமும் பிடித்தனர்.


Next Story