சிங்கம்புணரியில் சேதமடைந்து காணப்படும் தபால் நிலைய கட்டிடம்


சிங்கம்புணரியில் சேதமடைந்து காணப்படும் தபால் நிலைய கட்டிடம்
x
தினத்தந்தி 1 Aug 2018 3:15 AM IST (Updated: 1 Aug 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் உள்ள தபால் நிலைய கட்டிட சுவர் மற்றும் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படுவதற்கு முன்பு கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் உள்ள தபால் நிலையம் கடந்த 2009–ம் ஆண்டு புதிதாக கட்டப்பட்டு அதில் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்தில் இருந்து சுமார் 30–க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு தபால்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த தபால் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்காக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தபால் நிலைய கட்டிடம் தற்போது மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு, அந்த சுவரில் உள்ள சிமெண்டு பெயர்ந்து கட்டிட கம்பிகள் மட்டுமே வெளியே தெரியும் வகையில் உள்ளது. மேலும் கட்டிடத்தின் சிலாப்கள் சேதமடைந்து தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:– குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த தபால் நிலைய அலுவலகத்தில் ஆங்காங்கேகே வெடிப்பு ஏற்பட்டு மேற்கூரை சிலாப் பகுதியில் பூசப்பட்ட சிமெண்டுகள் கீழே பெயர்ந்து எந்த நேரமும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த பகுதியில் பலத்த காற்று வீசினால் கூட இந்த சிமெண்டு சிலாப் பெயர்ந்து அருகில் உள்ள வீடுகளில் விழும் நிலை உள்ளது. மேலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த மேலூர் சாலையில் உள்ள இந்த தபால் நிலையம் உள்ளது. இதன் அருகில் தொடக்கப்பள்ளிகள், அரசு மருத்துவமனை, கோவில் ஆகியவை உள்ளன. சேதமடைந்த தபால் நிலைய கட்டிடத்தால் இப்பகுதி வழியாக கோவில், பள்ளிகளுக்கு செல்வோர் ஒருவித அச்சத்துடன் இந்த கட்டிடத்தை கடந்து செல்கின்றனர். எனவே விபத்து ஏற்படும் வகையில் உள்ள இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story