ஸ்கூட்டர் மீது பஸ் மோதி விபத்து: பெண் சாவு
திருப்பூரில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதிய விபத்தில் விசைத்தறி உரிமையாளரின் மனைவி கால் நசுங்கி படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருப்பூர்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூரை அடுத்த பல்லடம் கரைப்புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 70). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி சரஸ்வதி(65). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் திருப்பூரில் உள்ள ஜவுளிக்கடைக்கு வந்து துணி எடுத்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். ஈஸ்வரன் ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றார். சரஸ்வதி பின்னால் அமர்ந்து இருந்தார்.
நேற்று முன்தினம் மதியம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே சென்றபோது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர்கள் ஸ்கூட்டரில் மோதியது. இதில் நிலைதடுமாறி ஈஸ்வரன், சரஸ்வதி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பஸ்சின் சக்கரம் ஏறியதில் சரஸ்வதியின் கால் நசுங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் சரஸ்வதியை மீட்க செல்வதற்கு தயங்கினார்கள். வலியால் துடித்த அவரை அங்கிருந்த திருப்பூரை சேர்ந்த லோகேஸ்வரி(38) என்ற திருநங்கை மீட்டு தண்ணீர் கொடுத்து கவனித்தார். இந்த விபத்தில் ஈஸ்வரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சரஸ்வதிக்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்சு வர தாமதமானது. பின்னர் அங்கு வந்த 108 ஆம்புலன்சில் ஏற்றி சரஸ்வதியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சரஸ்வதி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார், விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story