கடைகளில் பொருட்கள் வாங்க துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை


கடைகளில் பொருட்கள் வாங்க துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 1 Aug 2018 4:00 AM IST (Updated: 1 Aug 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

கடைகளில் பொருட்கள் வாங்க துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் முதல் காலாண்டிற்கான உணவு பாதுகாப்புத்துறை செயல் அறிக்கை குறித்த குழு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதை ஒரு கொள்கையாக எடுத்து கொண்டு அதை செய்து காட்ட வேண்டும். பிளாஸ்டிக் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வணிக நிறுவனங்களில் வைப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பை வழங்காமல் துணிப்பைகளை பயன்படுத்த வணிகர்கள் அறிவுறுத்த வேண்டும்.

டீக்கடைகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் பொருட் களை வாங்க கடைக்கு செல்லும்போது, பொருட்களை எடுத்து வருவதற்கு ஏதுவாக துணிப்பைகளையோ அல்லது பாத்திரங்களையோ எடுத்து செல்ல வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையால் வழங்கப்படும் உரிமம் இன்றி ஓட்டல்கள், டீக்கடைகளை நடத்தினால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கே.சி.அருண் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், வணிகர் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Next Story