தனியார் பள்ளி காவலாளியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம் கொள்ளை


தனியார் பள்ளி காவலாளியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 1 Aug 2018 3:45 AM IST (Updated: 1 Aug 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டில் தனியார் பள்ளி காவலாளியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

அணைக்கட்டு, 



வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காந்தி ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சின்ன அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 45) என்பவர் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் பெருமாள் நேற்று முன்தினம் இரவில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பள்ளியின் மெயின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு காவலில் இருந்த பெருமாளை தாக்கி, நாற்காலியில் அவரை கட்டிப்போட்டனர். தொடர்ந்து அவர் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கத்தை பறித்தனர். அதன் பின்னர் பள்ளி அலுவலக கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கு பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை பதிவு செய்யும் எந்திரத்தையும் அக்கும்பல் எடுத்து சென்றனர். நேற்று காலை பள்ளிக்கு நடைபயிற்சிக்கு சென்றவர்கள், காவலாளி பெருமாளை நாற்காலியில் கட்டிப்போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பெருமாளின் கட்டுகளை அவிழ்த்து விட்டனர். அதைத்தொடர்ந்து பெருமாள் இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பள்ளி தாளாளர் அரி, அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு மர்ம கும்பலின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து காவலாளியை கட்டிப்போட்டு ரூ.98 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story