வடகர்நாடக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க கோரி பெலகாவியில் மடாதிபதிகள் ஆர்ப்பாட்டம் எடியூரப்பா நேரில் ஆதரவு


வடகர்நாடக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க கோரி பெலகாவியில் மடாதிபதிகள் ஆர்ப்பாட்டம்  எடியூரப்பா நேரில் ஆதரவு
x
தினத்தந்தி 1 Aug 2018 12:00 AM GMT (Updated: 31 July 2018 10:05 PM GMT)

வட கர்நாடக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க கோரி பெலகாவியில் மடாதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எடியூரப்பா நேரில் சென்று ஆதரவு வழங்கினார்.

பெங்களூரு,

வட கர்நாடக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க கோரி பெலகாவியில் மடாதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எடியூரப்பா நேரில் சென்று ஆதரவு வழங்கினார்.

மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

கர்நாடக பட்ஜெட்டில் வடகர்நாடகத்தை குமாரசாமி முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மடாதிபதிகள் ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் வடகர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 2–ந் தேதி(அதாவது, நாளை) 13 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தனி மாநில கோரிக்கை குறித்த போராட்டத்திற்கு தான் தலைமை தாங்கி நடத்த தயார் என்று பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. அறிவித்தார். அவருக்கு அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். கர்நாடகத்தை பிளவுபடுத்தும் வி‌ஷயத்திற்கு கர்நாடக மக்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ஜனதா ஆதரிக்காது

இந்த நிலையில் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. வடகர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க கோரும் கோரிக்கையை பா.ஜனதா ஆதரிக்காது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இந்த தனி மாநில பிரச்சினை எழுந்ததற்கு தேவேகவுடாவும், குமாரசாமியும் தான் காரணம் என்று எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் வடகர்நாடகத்தை சேர்ந்த மடாதிபதிகள் பெலகாவியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடகர்நாடகத்தின் வளர்ச்சிக்கு அதிக எண்ணிக்கையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும், பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவுக்கு மாநில அரசின் 10 துறைகளை இடம் மாற்ற வேண்டும், இந்த சுவர்ண சவுதா, விதான சவுதாவை போல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

தீவிர போராட்டம்

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பெலகாவி மாவட்ட கூடுதல் கலெக்டரை மடாதிபதிகள் நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். மனுவில் கூறப்பட்டுள்ள அம்சங்களை குமாரசாமி நிறைவேற்ற தவறினால் தீவிர போராட்டம் நடத்துவோம் என்றும் மடாதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு நேரில் ஆதரவு வழங்கினார்.

எடியூரப்பா கேட்டுக் கொண்டதை அடுத்து வடகர்நாடகத்திற்கு தனி மாநில கோரிக்கையை கைவிட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் வடகர்நாடக தனி மாநிலத்திற்கான கொடியை சிலர் கையில் உயர்த்தி பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story