வடகர்நாடகம் எனது உயிரின் ஒரு பாகம் கர்நாடகம் பிளவுபடுவதை கனவில் கூட நினைக்க முடியாது குமாரசாமி உருக்கமான பேச்சு
வடகர்நாடகம் எனது உயிரின் ஒரு பாகம் என்றும், கர்நாடகம் பிளவுபடுவதை கனவில் கூட நினைக்க முடியாது என்றும் முதல்–மந்திரி குமாரசாமி உருக்கமாக கூறினார்.
பெங்களூரு,
வடகர்நாடகம் எனது உயிரின் ஒரு பாகம் என்றும், கர்நாடகம் பிளவுபடுவதை கனவில் கூட நினைக்க முடியாது என்றும் முதல்–மந்திரி குமாரசாமி உருக்கமாக கூறினார்.
குமாரசாமிக்கு சிக்கல்கர்நாடக பட்ஜெட்டில் வட கர்நாடகம் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. வட கர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க கோரி 2–ந் தேதி(அதாவது நாளை) 13 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு சில அமைப்புகள் மற்றும் மடாதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் குமாரசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்–மந்திரி குமாரசாமியை பெங்களூருவில் நேற்று வட கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோனரெட்டி உள்பட சில அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இதில் குமாரசாமி பேசியதாவது:–
வட கர்நாடகம், தென் கர்நாடகம் என்று எங்கள் அரசு எப்போதும் வேறுபடுத்தி நினைத்தது கிடையாது. அதுபோல் நினைக்கவும் மாட்டோம். பெலகாவியை நமது மாநிலத்தின் 2–வது தலைநகரமாக மாற்றுவேன் என்று அறிவித்தேன். அரசின் சில துறைகளை சுவர்ண சவுதாவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன். வட கர்நாடகத்தில் தொழில்களை தொடங்கவும், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கவும் ரூ.500 கோடி நிதியை ஒதுக்கி இருக்கிறேன்.
எனது உயிரின் ஒரு பாகம்விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தால் வட கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகள் தான் அதிகளவில் பயன் பெறுகிறார்கள். வட கர்நாடகம் எனது உயிரின் ஒரு பாகம். இதற்கு முன்பு நான் முதல்–மந்திரியாக இருந்தபோது 27 முறை வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினேன். நிலைமை இவ்வாறு இருக்க நான் வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறேன் என்று தவறான தகவல்களை வெளியிடுபவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்.
ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. கூறிய கருத்துக்கு நான் பதிலளித்தேன். அதை சிலர் திட்டமிட்டு பெரிதுபடுத்திவிட்டனர். நான் கூறிய கருத்தை தவறாக கூறி சிலர் இந்த சமுதாயத்தை உடைக்க முயற்சி செய்கிறார்கள். கர்நாடகம் ஒன்றே என்ற எனது மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. கன்னட கலாசாரத்தில் வட கர்நாடகத்தின் பங்கு அளப்பரியது.
உடைக்க முடியாதுவட கர்நாடகம் இந்த மண்ணின் பெருமைக்குரிய பகுதி. வட கர்நாடகத்திற்கு உரிய சமமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் முன்பு முதல்–மந்திரியாக இருந்தபோது சட்டசபை கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்தினேன். கர்நாடகத்தின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் தான் தனி மாநில விவகாரத்தை கையில் எடுத்து செயல்படுகிறார்கள்.
நமது முன்னோர்கள் பிளவுபட்டு கிடந்த கர்நாடகத்தை போராடி ஒருங்கிணைத்தனர். இதற்காக பலர் தங்களின் வாழ்க்கையையே தியாகம் செய்தனர். அதுபற்றி நான் பெருமைப்படுகிறேன். இத்தகைய கர்நாடகத்தை எந்த சதி திட்டம் தீட்டினாலும் உடைக்க முடியாது. தேசிய அளவில் பல்வேறு துறைகளில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. அதே போல் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்து துறையிலும் கர்நாடகத்தை முதல் இடத்திற்கு முன்னேற்ற நாம் பாடுபட வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.