தினம் ஒரு தகவல் : தீ எனும் அற்புதம்


தினம் ஒரு தகவல் : தீ எனும் அற்புதம்
x
தினத்தந்தி 1 Aug 2018 10:39 AM IST (Updated: 1 Aug 2018 10:39 AM IST)
t-max-icont-min-icon

குளிர்காலங்களில் உயிர்வாழ்வதற்குத் தேவையான கதகதப்பை ஏற்படுத்துவதற்கு தீ அமைந்தது.

மனித குலத்தின் ஆதிகுடிகள் தோன்றிய ஆப்பிரிக்காவில் ஆஷ்லியன் பகுதியைச் சேர்ந்த யாரோ ஒருவரோ அல்லது சிலரோ சுமார் 7,90,000 ஆண்டுகளுக்கு முன்னால் செய்து பார்த்த ஒரு பரிசோதனை, வரலாற்றின் முதல் திருப்புமுனைகளில் ஒன்றாக மாறியது. அவர் யாரென்று நமக்குத் தெரியாது.

ஆனால், அவரே தீயை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், பயன்படுத்தவும் முதன் முதலில் முயற்சித்துள்ளார். சிக்கிமுக்கிக் கற்களை வைத்து நெருப்புப் பொறியை உருவாக்க முயற்சித்ததே அந்தப் பரிசோதனை. ஒரு பொருள் எரிந்து ஆக்சிஜனேற்றம் அடைவது என்ற அறிவியல் செயல்பாட்டை கண்டுபிடித்ததன் விளைவு, மனிதகுலம் உலகம் முழுவதும் பரவ முக்கிய காரணம் என்று தீயை கட்டுப்படுத்துவதற்கான முதல் ஆதாரங்களை ஆராய்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் பற்ற வைப்பது என்ற அச்சமூட்டும் அம்சத்துடன் சேர்ந்துதான் இந்தக் கண்டுபிடிப்பு வந்தது. அந்த அச்சத்தை மீறி தீப்பந்தங்களை ஏற்றியதன் மூலம் விலங்குகளிடம் இருந்து தங்களையும், தங்கள் வாரிசுகளையும் மனித இனம் காப்பாற்றிக் கொண்டது.

குளிர்காலங்களில் உயிர்வாழ்வதற்குத் தேவையான கதகதப்பை ஏற்படுத்துவதற்கு தீ அமைந்தது. கூடுதலாக, இறைச்சி, தாவரங்களை சுட்டுச் சாப்பிடவும், மாறுபட்ட உணவு வகைகளைச் சாப்பிடும் வாய்ப்பும், ஊட்டச்சத்து பற்றாக்குறையைத் தவிர்க்கவும் தீ உதவியது.

தீ கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், மனித குலம் எந்தக் கருவிகளையும் உருவாக்கி இருக்க முடியாது. நடந்து செல்வதில் ஆரம்பித்து, வாகனங்களில் பயணிப்பது வரை எதுவும் நடந்திருக்காது. தீ கண்டுபிடிக்கப்பட்டதின் காரணமாக, நியாண்டர்தால் மனிதர்கள் 3,00,000 முதல் 4,00,000 ஆண்டுகளுக்கு முன் உலோகவியலை உருவாக்கினர்.

அறிவியல் வரையறைப்படி ஒரு பொருள் வேகமாக ஆக்சிஜனேற்றம் அடைவதே தீ. இது வெப்பத்தை வெளியேற்றும் ஒரு வேதியியல் செயல்பாடு. காற்றில் ஆக்சிஜன் இல்லையென்றால் தீயை பற்ற வைக்க முடியாது. ஒரு பொருள் எரியும்போது ஆக்சிஜனேற்றம் அடைவதால், அந்த பொருளில் சேமிக்கப்பட்ட கரி மீண்டும் தன் பழைய நிலையை அடைந்துவிடும்.

கந்தகம் போன்ற வேதிப்பொருளை பிரிக்க முடிந்த பிறகு, மனிதர்களால் தீக்குச்சியைத் தயாரிக்க முடிந்தது. இன்றைக்கு ஒரு சிறிய தீப்பொறியை உருவாக்குவது மிகப் பெரிய பிரச்சினையாக இல்லை. அதே நேரம் இன்றைக்கும் எரிபொருள்களால்தான் மனித வாழ்க்கை நடத்தப்படுகிறது. இன்றைக்கு உலகம் பரபரப்பாக இயங்குவதற்குக் காரணம் மின்சாரமும், எரிபொருள்களும்தான். உணவு எரிக்கப்பட்டால் தான் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். இப்படி உலகின் மூலை முடுக்கெல்லாம் வெவ்வேறு முறைகளில் தீயின் பயன்பாடு நிறைந்திருக்கிறது.


Next Story