காதல் திருமணம் செய்த பெண் மர்மசாவு
கடலூரில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்,
நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பாதி அருந்ததியர் நகரை சேர்ந்தவர் வீரக்குமார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தடகள வீராங்கனையும், பட்டதாரி பெண்ணுமான இந்துமதி(26) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்திஷ்ராவ் (2) என்ற மகனும், திஷீத்ராவ் என்ற 4 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
பணிநிமித்தம் காரணமாக வீரக்குமார் தற்போது கடலூர் ஆல்பேட்டை, கன்னிகோவில்தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சொந்தமாக தொழில் செய்வதற்கு இந்துமதியிடம் ரூ.3 லட்சம் கேட்டு வீரக்குமார் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையே வீரக்குமாரின் தம்பி அனுசாந்த் மேல்கவரப்பட்டு கிராமத்துக்கு சென்று இந்துமதியின் தாய் ஜெயபாரதியிடம் உங்கள் மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது உடனே வாருங்கள் என்று கூறி அவரை மோட்டார் சைக்கிளில் நெல்லிக்குப்பம் மேல்பாதிகிராமத்தில் உள்ள வீரக்குமாரின் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்போது கழுத்தில் மாலை அணிவித்து, முகத்தில் மஞ்சள், குங்குமம் பூசிய நிலையில் இந்துமதி படுக்கையில் பிணமாக கிடந்ததை பார்த்து ஜெயபாரதி கதறி அழுதார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வீரக்குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் தனது மகள் சாவில் ஜெயபாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடம் கடலூர் என்பதால் ஜெயபாரதியின் புகார் மனுவை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அவரது உறவினர்கள், நண்பர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பிணக்கோலத்தில் இருந்த அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். கணவன், மனைவிக்கிடையே நடந்த சண்டையில் வீரக்குமார் ஆத்திரம் அடைந்து இந்து மதியை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இது குறித்து இந்துமதியின் உறவினர் நித்யா கூறியதாவது:-
இந்துமதி சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். தாய் ஜெயபாரதிதான் அவளை பாசத்துடன் வளர்த்து வந்தார். ஜெயபாரதி மேல் கவரப்பட்டில் அங்காளம்மன் கோவில் அமைத்து குறிசொல்லி வருகிறார். குறிகேட்க வரும்போது இந்துமதிக்கும், வீரக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். ஒரே மகள் என்பதால் இந்துமதியை வீரக்குமாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். திருமணத்தின் போது போதிய சீர்வரிசைகளையும் செய்து கொடுத்தார்.
வீரக்குமார் புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பணிக்காக அவர் குடும்பத்துடன் கடலூர் ஆல்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அப்போது காய்கறி கடை நடத்த இருப்பதாகவும், அதற்கு தனக்கு ரூ.5 லட்சம் தேவைப்படுவதாகவும் இந்துமதியிடம் வீரக்குமார் கேட்டார். உடனே இந்துமதி அவரது தாய் ஜெயபாரதியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டார். அவரும் ஆடிமாதம் கோவில் திருவிழா முடிந்ததும் தருவதாக கூறினார். சில நாட்களுக்கு முன்பு குளிர்சாதன எந்திரம் வாங்கி கேட்டார் அதையும் வாங்கி கொடுத்தோம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்துமதியிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவளை வீரக்குமார் தாக்கி இருக்கிறார். இதில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். ஆம்புலன்சு ஊழியர்கள் இந்துமதியை பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
பின்னர் இந்துமதியின் உடலை எடுத்துக்கொண்டு வீரக்குமார் அவரது சொந்த ஊரான மேல்பாதிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு படுக்கையில் இந்துமதியின் உடலை கிடத்தி மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமத்தை பூசி வைத்து விட்டு உங்கள் மகளுக்கு உடல் நிலை சரியில்ல என்று எனது சித்தி ஜெயபாரதிக்கு போன் செய்துள்ளார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு இந்துமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துவிட்டாள் என கூறியிருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு அவரது சாவில் சந்தேகம் இருக்கிறது. போலீசார் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்றார் அவர்.
இந்து மதியின் தாயார் ஜெயபாரதி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து செய்தனர். மேலும் இந்துமதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து கடலூர் சப்-கலெக்டர் சரயு விசாரணை நடத்தி வருகிறார்.