குளித்ததை தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கிய மத்திய பாதுகாப்பு படை வீரர் உள்பட 4 பேர் கைது


குளித்ததை தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கிய மத்திய பாதுகாப்பு படை வீரர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2018 3:30 AM IST (Updated: 1 Aug 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பணையில் குளித்ததை தட்டிக்கேட்ட குப்பம் போலீசாரை தாக்கிய மத்திய பாதுகாப்பு படை வீரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திர எல்லையான புல்லூர் பகுதியில் கனகநாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆந்திர அரசு 12 அடி உயரத்தில் தடுப்பணை கட்டியுள்ளது. தற்போது தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், இந்த அணையில் குளிக்க ஆந்திர அரசு தடை விதித்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தடுப்பணையில் 4 வாலிபர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆந்திர மாநிலம் குப்பம் போலீஸ்காரர்கள் முருகேஷ், வெங்கடேஷ் ஆகியோர் அந்த வாலிபர்களிடம் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து செல்லுங்கள் என கூறினர். ஆனால் வாலிபர்கள் தொடர்ந்து குளித்து கொண்டிருந்தனர். இதனால் போலீசாருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும், போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓடிசென்று தகராறில் ஈடுபட்ட 4 வாலிபர்களையும் பிடித்து அங்கிருந்த கோவிலுக்கு சொந்தமான அறையில் வைத்து பூட்டினர். பின்னர் குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த 2 போலீசாரையும் மீட்டு, சிகிச்சைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணையில், போலீசாரை தாக்கியது ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த அருண் (வயது 28), மத்திய பாதுகாப்பு படை வீரர் என்பதும், விடுமுறையில் ஊருக்கு வந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு அணையில் குளித்து கொண்டிருந்த போது, தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து அருண் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

Next Story