சாயக்கழிவு நீர் கலந்துள்ளதாக குற்றசாட்டு: அணையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு


சாயக்கழிவு நீர் கலந்துள்ளதாக குற்றசாட்டு: அணையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 1 Aug 2018 11:00 PM GMT (Updated: 1 Aug 2018 5:52 PM GMT)

செட்டிபாளையம் அணை நீரில் சாயக்கழிவுநீர் கலந்திருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியதன் பேரில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்குள்ள ஒரு சாயப்பட்டறையை இயக்க தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கரூர்,


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டும் வகையில் வந்ததால் உபரி நீர் கரூர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

 இதன் காரணமாக கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகள் நிரம்பின. இதை பயன்படுத்தி அமராவதி ஆற்று பாசன விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் கரூர் அமராவதி ஆறு மீண்டும் பழையபடி மணற்பாங்காக காட்சியளிக்கிறது.


இந்த நிலையில் கரூர் அருகே அப்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் அணைகட்டில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் நிறமானது சற்று கலங்கலாக மாறியது. அங்கிருந்து கிளை வாய்க்காலில் சென்ற நீரானது கருப்பு, பச்சை உள்ளிட்ட நிறங்களில் இருந்தது. மேலும் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் கிணற்றிலிருந்து நீரை இரைத்து பயன்படுத்தும் போதும் கூட, தண்ணீரில் மாசு கலந்திருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். அப்போது தான் செட்டி பாளையம் அணைநீரில் சாயக்கழிவு திறந்து விடப்பட்டிருப்பதாக கரூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையே கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்டோர் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் ராமலிங்கம் உள்பட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் நேற்று செட்டிபாளையம் அணையில் தேங்கிய நீரை பாட்டிலில் பிடித்து வைத்து அதிகாரிகளிடம் கொண்டு சென்று கோரிக்கை மனு கொடுப்பதற்காக தயாரானார்கள்.


இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திரபாபு, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிசந்திரன் உள்பட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்களை சாயக்கழிவு விவசாயிகள் சங்கத்தினர் சூழ்ந்து கொண்டு, அமராவதி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிய போது சாயக்கழிவுநீர் அதில் திறந்து விடப்பட்டிருக்கிறது. பின்னர் ஆற்றில் தண்ணீர் வற்றிய காரணத்தினால் நீரின் நிறம் மாறியதாலும், மக்களுக்கு தோல்வியாதி உள்ளிட்டவை ஏற்படுவதாலும் தான் இதனை கண்டுபிடிக்க முடிந்தது என குற்றம் சாட்டி முறையிட்டனர்.

அதன் பின்னர் அதிகாரிகள் அங்குள்ள நீரில், டி.டி.எஸ். மீட்டர் என்கிற கருவியை வைத்து சாயக்கழிவு கரைசல் கலந்திருக்கிற விகிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறிதளவு சாயக்கழிவு நீரில் கலந்திருப்பது தெரிய வந்தது. மேலும் அதிகாரிகள் பரிசோதனைக்காக அந்த நீரினை பாட்டிலில் அடைத்து எடுத்து கொண்டனர். பின்னர் ஆற்றில் சாயக்கழிவு நீரை திறந்து விட்டது குறித்து முறைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டு சென்றனர்.


இந்த பிரச்சினை தொடர்பாக சாயக்கழிவினால் பாதிக்கப்பட்டோர் விவசாய சங்க செயலாளர் ராமலிங்கம் கூறியதாவது:–

 செட்டிபாளையம் அணை நீர் மூலம் சுக்காலியூர், அப்பிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எக்டேரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அப்படி இருக்கையில் தற்போது கலந்துள்ள சாயக்கழிவினால் நீரின் தன்மை மாசடைந்து விளைச்சலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு குடிநீர் ஆதாரமான இந்த நீரை மக்கள் அருந்துவதால் அவர்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நேரடியாக ஆற்றுக்குள் இறங்கி மாசடைந்த நீரை அருந்துகின்றன. இதனால் அவை பாதிக்கப்படுவதோடு, அதன் பாலை பயன்படுத்தும் நமக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? என்பதை விஞ்ஞானரீதியில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


 எனவே அணையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளை ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக ஆற்றில் கழிவினை விடுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது அணை நீரில் பெரிய அளவில் மாசு இல்லை என கூறுகின்றனர். எனினும் உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து மீண்டும் தண்ணீரை திறந்து விட்டால் தான், கரூரில் மாசு நீரை வெளியேற்ற முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் வழிகாண வேண்டும். ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் சாயக்கழிவு பிரச்சினை பற்றி பேசுகிறோம். எனவே இதனை இப்படியே விட்டு விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


இது தொடர்பாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திரபாபு கூறும்போது, பாலப்பட்டி ஊராட்சி செய்யப்பகவுண்டன்புதூரில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் இருந்து கழிவுகள் வெளியேறியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பட்டறையை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டறைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் நீராதாரத்தை சீர்குலைக்கும் வகையில் இது போன் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story