மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் உதவி கலெக்டர் உத்தரவு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடத்துவது மற்றும் அரசு நலத்திட்டங்களை வழங்குவது குறித்த மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–
மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ முகாம்களை வருகிற 8–ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7–ந் தேதி வரை நடத்த வேண்டும். இந்த மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இம்முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்களை வழங்குவதற்காக வருவாய்த்துறையின் மூலம் மருத்துவ முகாம் முடிந்த 10 நாட்களுக்குள் வருமான சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு மருத்துவ முகாம்களில் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை ஒருங்கிணைப்புடன் மாற்றுத்திறனாளி மாணவர்களின் இயலாத் தன்மைக்கேற்றவாறு உதவி உபகரணங்களை வழங்க தக்க அளவீடு செய்தல் வேண்டும்.
மேலும் அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களை சென்றடைவதற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், கல்வித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.