வடகர்நாடகத்தில் இன்று அறிவிக்கப்பட்டு இருந்த முழுஅடைப்பு போராட்டம் வாபஸ்
தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வடகர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த முழு அடைப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது.
பெங்களூரு,
தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வடகர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த முழு அடைப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது. ஆனால் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
மடாதிபதிகள் கடும் கண்டனம்
குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். அவர் 2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் வடகர்நாடகம் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினார். மேலும் அந்தப்பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்பினரும், மடாதிபதிகளும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். வடகர்நாடகத்தை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதனால் கடும் கோபம் அடைந்த குமாரசாமி, “வடகர்நாடகத்தை தனி மாநிலமாக எடுத்துக்கொள்ளுங்கள், எங்கிருந்து நிதியை திரட்டுவீர்கள் என்று பார்க்கிறேன்“ என்று ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆவேசமாக பேசினார். இதற்கு வடகர்நாடகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் மடாதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆதரவு நிலைப்பாட்டை...
மேலும் வடகர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க கோரி 2-ந் தேதி (அதாவது இன்று) 13 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வடகர்நாடக போராட்ட குழு அறிவித்தது. பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்திற்கு தலைமை ஏற்க தயார் என்று பா.ஜனதா தலைவர் களில் ஒருவரான ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. கூறினார். இந்த நிலையில் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கர்நாடகத்தை பிளவுபடுத்தும் கோரிக்கைக்கு ஆதரவு இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.
வடகர்நாடகத்தை சேர்ந்த மடாதிபதிகள் நேற்று முன்தினம் பெலகாவி சுவர்ண சவுதா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடகர்நாடகத்தின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். கர்நாடகம் பிளவுபடுவதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்றும், எனது உயிரில் வடகர்நாடகம் ஒரு பாகம் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி உருக்கமாக கூறினார். மேலும் தனி மாநில கோரிக்கையை கைவிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அந்த பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
முழு அடைப்பு திடீர் வாபஸ்
சில அமைப்புகள் மற்றும் மடாதிபதிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால், வடகர்நாடகத்தில் ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்று(வியாழக்கிழமை) முழு அடைப்பு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. முழு அடைப்பு நடைபெற இருந்த 13 மாவட்டங்களில் அரசு பஸ்கள், பள்ளி-கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று இரவு ஹாவேரியில் வடகர்நாடக தனி மாநில போராட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டதாக அக்குழுவின் தலைவர் சோமசேகர் கோதம்பரி அறிவித்தார்.
போராட்டம் நடத்துவோம்
இதுகுறித்து அவர் கூறுகையில், “கர்நாடக பட்ஜெட்டில் வடகர்நாடகத்தை புறக்கணித்ததை அடுத்து நாளை (அதாவது இன்று) வடகர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்து இருந்தோம். இதற்கிடையே முதல்-மந்திரி குமாரசாமி எங்களை அழைத்து பேசினார். அப்போது வடகர்நாடகத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை அமல்படுத்துவதாக உறுதியளித்தார். அவர் அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று நாங்கள் நாளை (இன்று) நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். அதே நேரத்தில் அடையாள போராட்டங் களை நடத்துவோம்” என் றார்.
Related Tags :
Next Story