திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள முயன்ற 395 பேர் கைது-தள்ளுமுள்ளு


திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள முயன்ற 395 பேர் கைது-தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 2 Aug 2018 3:30 AM IST (Updated: 2 Aug 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 395 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 395 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக் கப்பட உள்ளது. இந்த சாலையானது காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களின் வழியாக செல்கிறது. இதற்காக நிலம் அளவிடும் பணி போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.

இந்த திட்டத்திற்கு விவசாயிகள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பசுமை சாலைக்காக தனது நிலத்தை பறி கொடுத்த விரக்தியில் செங்கத்தை சேர்ந்த விவசாயி சேகர் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘என் நிலம், என் உரிமை‘ என்ற முழக்கத்துடன் திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி 170 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நடைபயண தொடக்க நிகழ்ச்சிக்காக நேற்று திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்ள கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர்.

இந்த நடை பயணத்திற்கு போலீசார் தரப்பில் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி நடைபயணம் மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆயத்தமாகினர்.

அதைத் தொடர்ந்து அங்கு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், வனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் நடைபயண தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை 11.30 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் அங்கு வந்தனர். நடைபயணம் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் 8 வழி சாலையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினர்.

இதனையடுத்து நண்பகல் 12 மணி அளவில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபயணம் தொடங்கப்பட்டது. 10 அடி தூரம் செல்வதற்குள் போலீசார் அவர்களை தடுத்து நடைபயணத்திற்கு அனுமதி இல்லை என்று கூறினர்.

இதனால் போலீசாருக்கும், நடைபயணத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு - முள்ளு ஏற்பட்டது. பின்னர் நடைபயணத்தில் கலந்துகொண்டவர்கள் போலீசாரின் பேரிக்கார்டுகளை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் நடைபயணத்தில் ஈடுபட்ட கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்பட 395 பேரை கைது செய்தனர். இதில் 44 பேர் பெண்கள் ஆவர். கைதானவர்கள் போலீஸ் வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story