பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 2 Aug 2018 4:15 AM IST (Updated: 2 Aug 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 2 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் 15 அடி சேறு சகதி போக நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு நீராதாரமாக விளங்குகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் கடந்த மாதம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் கோவை மாவட்டம் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு 90 அடியை தாண்டியது.

இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முன்னதாக அதாவது ஆகஸ்டு 1–ந் தேதியே தண்ணீர் திறக்கப்படும் என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை 9 மணி அளவில் பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக நன்செய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு, மதகின் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தனர். அப்போது சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீருக்கு அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வணங்கினார்கள். முன்னதாக அணையின் மேல்பகுதியில் உள்ள பவானி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும்போது, ‘வழக்கமாக ஆகஸ்டு 15–ந் தேதி திறக்கப்படும் பவானிசாகர் அணை இந்த ஆண்டு முன்னதாக ஆகஸ்டு 1–ந் தேதியே திறக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சாதனையாகும். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி அளவில் 120 நாட்கள் தொடர்ந்து அதாவது நவம்பர் மாதம் 28–ந் தேதிவரை செல்லும்.

இதனால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்க உரம் மற்றும் விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. இவற்றை வாங்கி பயன்பெறலாம். தற்போது போதிய அளவு தண்ணீர் இருந்தாலும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் அடுத்த போகத்திற்கும் தண்ணீர் கிடைக்கும்’. என்றார். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி வரை அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஈஸ்வரன் (பவானிசாகர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), இ.எம்.ஆர்.ராஜா (அந்தியூர்), தனியரசு (காங்கேயம்) மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதநிதிகள், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.

நேற்று காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.86 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 18 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


Next Story