பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதிய டாஸ்மாக் கடை திறப்பது நிறுத்தம்


பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதிய டாஸ்மாக் கடை திறப்பது நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Aug 2018 3:45 AM IST (Updated: 2 Aug 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், புதிய டாஸ்மாக் கடை திறப்பது நிறுத்தப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி கைக்காலன்குட்டை காலனி பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் காலனி அருகே உள்ள ஒரு இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்திருந்தனர்.

இதற்காக கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மதுபாட்டிகள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் காலனி பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100–க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பட்டிருந்த இடத்துக்கு வந்தார்கள். பின்னர் அங்கிருந்த பணியாளர்களிடம் இங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. நாங்கள் விடமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான், சப்–இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் போலீசாரிடம், ‘இதுகுடியிருப்பு நிறைந்த பகுதி. இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்‘ என்றார்கள். அதன்பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பின்னர், டாஸ்மாக் மேலாளர் ‘அந்த இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்காமல் நிறுத்திவைக்கிறோம்‘ என்று உறுதி கூறினார். இதை பொதுமக்களிடம் ஜான் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.


Next Story