சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க புதுச்சேரிக்கு கடலோர காவல்படை கப்பல் வருகிறது, அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தகவல்
சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க வசதியாக புதுச்சேரிக்கு கடலோர காவல்படை கப்பல் வருகிறது.
புதுச்சேரி,
புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாவை கப்பல்படை அதிகாரிகள் நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் சுற்றுலாத்துறை, பிரெஞ்சு நிறுவன அதிகாரிகள் உடனிருந்தனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த கடலோர காவல்படைக்கு சொந்தமான பணிக்காலம் முடிந்த கப்பலை கேட்டுள்ளோம். அதன்படி இலவசமாக கப்பலை தர ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இந்த கப்பல் 64 மீட்டர் நீளம், 29 மீட்டர் உயரம் கொண்டதாகும். விரைவில் அந்த கப்பல் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட உள்ளது.
புதுவை கடல் பகுதியில் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் அது காட்சிக்கு நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகள் கடற்கரையில் இருந்து படகு மூலம் அழைத்து செல்லப்பட்டு கப்பலை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிரெஞ்சு சாகச நிறுவனம், கடலோர காவல்படை, புதுச்சேரி சுற்றுலாத்துறை இணைந்து கடல் சாகச விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடல் பகுதி பெரும்பாலும் அமைதியாகவே காணப்படும். எனவே இந்த கப்பலை புதுச்சேரியில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா மேம்படும். சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அரசுக்கு எந்த செலவும் கிடையாது. சுற்றுலாத் துறைக்கும் வருவாய் அதிக அளவில் கிடைக்கும். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி பெற கோப்புகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயன்படுத்தாத விமானம் கொண்டுவரப்பட்டு புதுச்சேரியில் நிறுத்தப்பட்டு சுற்றலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உணவு விடுதி கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.