வேப்பனப்பள்ளி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு


வேப்பனப்பள்ளி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 2 Aug 2018 3:45 AM IST (Updated: 2 Aug 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தமிழக எல்லையில் அரியனப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசு தொல்லையால் இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, அரியனப்பள்ளி கிராமத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும், இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story