தூத்துக்குடியில் ரசாயனம் அகற்றும் பணி: ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கொட்டி 2 தொழிலாளர்கள் படுகாயம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனம் அகற்றும் பணியின் போது கந்தக அமிலம் கொட்டி 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனம் அகற்றும் பணியின் போது கந்தக அமிலம் கொட்டி 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது நடந்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஆலையை மூட அரசாணை வெளியிட்டது. அதன்பேரில் கடந்த மே மாதம் 28-ந் தேதி ஆலைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலையில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கந்தக அமிலம் டேங்கில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் மேற்பார்வையில் கசிவு ஏற்பட்ட டேங்கில் உள்ள கந்தக அமிலம் அகற்றப்பட்டது.
ரசாயனங்கள் அகற்றும் பணி
மேலும் தமிழக அரசின் சார்பில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஆலையில் என்னென்ன ரசாயனங்கள் உள்ளன, எவ்வளவு ரசாயனங்கள் உள்ளன? என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
தொடர்ந்து அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையில் உள்ள ரசாயனங்களை அகற்றுவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மேற்பார்வையில் கடந்த மாதம் 2-ந் தேதி முதல் ரசாயனங்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் நிறுவன ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
அமிலம் வரும் குழாய்
இந்த நிலையில் ஆலையில் இருந்து பெரும்பாலான அமிலம் உள்ளிட்ட ரசாயனங்கள் 99 சதவீதம் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. ஜிப்சம், ராக்பாஸ்பேட், தாமிரதாது உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டு இருந்த டேங்குகளின் அடியில் உள்ள சிறிதளவு அமிலத்தை எடுக்க முடியாததால், அதனை நீர்த்து போக செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. நேற்று ஆலையில் சுமார் 325 ஸ்டெர்லைட் ஊழியர்களும், 230 ஒப்பந்த ஊழியர்களும் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இங்கு உள்ள கந்தக அமிலம் தயாரிக்கும் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் அமிலம், ஒரு குழாய் மூலம் அங்கு வைக்கப்பட்டு உள்ள டேங்குகளில் கொண்டு வந்து சேகரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று மதியம் ஆலையில் இருந்து 2-வது டேங்குக்கு வந்த ஒரு குழாயை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
2 தொழிலாளர்கள் படுகாயம்
இந்த பணியில் தூத்துக்குடி கிருபைநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 39), அத்திமரப்பட்டியை சேர்ந்த ஜெயசங்கர் (29) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் அந்த குழாயில் இருந்த ஒரு வால்வை திறந்தனர். அப்போது அதிக அழுத்தத்துடன் அமிலம் வால்வு வழியாக வெளியேறியது. இதனால் ஜெயசங்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது கந்தக அமிலம் கொட்டியது. உடனே அவர்கள் அலறி துடித்தனர்.
இதை பார்த்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்து 2 பேரையும் மீட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயசங்கர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். காயமடைந்த பாலசுப்பிரமணியனுக்கு ஆலையில் உள்ள டாக்டர்களே சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் ஆலைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.