நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்கக்கோரி பந்தலூரில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்கக்கோரி பந்தலூரில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:30 AM IST (Updated: 2 Aug 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்கக்கோரி பந்தலூரில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பந்தலூர்,

பந்தலூரில் இயங்கி வரும் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் உடனே நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி நேற்று காலை கொட்டு மழையையும் பொருட்படுத்தாமல் தேயிலை தோட்ட நுழைவு வாயில் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பி.டபிள்யூ.சி. தொழிற்சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:–

இந்த தொழிற்சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். இங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு முறையாக பணிக்கொடை வழங்கப்படவில்லை. தற்போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினசரி கூலியான 308 ரூபாய் 70 பைசாவை மாதத்தின் முதல் வாரத்தில் வழங்குவதில்லை. மேலும் கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்காமல் தேயிலை தோட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர தேயிலை தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது, களை வெட்டுவது போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் தோட்டத்தில் அட்டைப்பூச்சி, பாம்பு போன்ற வி‌ஷ ஜந்துகள் பெருகி வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்பளம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது தொழிலாளர் நல அலுவலர் மற்றும் தோட்ட நிர்வாகத்திடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் உறுதி அளித்தார். ஆனால் அதன்பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story