அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி திருச்செந்தூரில் 9-ந் தேதி தொடங்குகிறது


அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி திருச்செந்தூரில் 9-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 2 Aug 2018 3:00 AM IST (Updated: 2 Aug 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி, வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) திருச்செந்தூரில் தொடங்குகிறது.

திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி, வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) திருச்செந்தூரில் தொடங்குகிறது.

சைக்கிள் பேரணி

தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) திருச்செந்தூரில் தொடங்கி, 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், திருச்செந்தூர் தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை முன்னிலை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியதோடு, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் 100 சதவீதம் நிறைவேற்றினார். இதனால் அவரது தலைமையில், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 37 இடங்களில் மகத்தான வெற்றியை பெற்றது.

இதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை சார்பில், தமிழகம் முழுவதும் வாக்குசாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டதும் முக்கிய காரணமாகும். மறைந்த ஜெயலலிதாவின் நலத்திட்ட பணிகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.

ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியை வரவழைத்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதேபோன்று மகப்பேறு நிதி உதவித்தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கி உத்தரவிட்டார்.

9-ந்தேதி, சைக்கிள் பேரணி

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை போன்று, அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும் வகையில், ஜெயலலிதா பேரவை சார்பில், தமிழக அரசின் நலத்திட்ட பணிகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், சைக்கிள் பேரணியை மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதேபோன்று வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொள்ளும் சைக்கிள் பேரணி தொடங்கப்பட உள்ளது. இதில் 7 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளிலும், 11-ந்தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளிலும், 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விளாத்திகுளம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகளிலும் சைக்கிள் பேரணி நடக்கிறது.

புறவழிச்சாலை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்துவது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் நகருக்குள் செல்லாமல், கடற்கரை வழியாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வகையில் ரூ.26 கோடி செலவில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரை வழியாக புறவழிச்சாலை அமைக்க ஆய்வுப்பணி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின்படி வீரபாண்டியன்பட்டினம் நத்தக்குளம் கால்வாயில் இருந்து மேம்பாலம் அமைத்து, கடற்கரை வழியாக தமிழ்நாடு சுற்றுலா மாளிகையின் பின்புறம் வரையிலும் சாலை அமைக்கப்படும். பின்னர் அங்கிருந்து நாழிக்கிணறு பஸ் நிலையத்தை சென்றடையும் வகையில் சுரங்க வழிப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story