தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பான கணக்கெடுப்பு பணி குறித்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பான கணக்கெடுப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பான கணக்கெடுப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பான கணக்கெடுப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, கணக்கெடுப்புக்கான லட்சினையை (லோகோ) வெளியிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:–
இந்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறித்து மத்திய அரசு சார்பில் தனியார் முகமை மூலம் ஆகஸ்ட் மாதம் 1–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட உள்ளன. இதில் சிறந்த மாவட்டம் மற்றும் மாநிலத்துக்கு அக்டோபர் மாதம் 2–ந் தேதி தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
ஒத்துழைப்புஆய்வின் போது, தூய்மை பாரத இயக்கத்தின் முக்கிய அளவீடுகளை ஒப்பீடு செய்தல், தூய்மை குறித்த அளவீடுகளை பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராம சந்தைகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களில் நேரடி ஆய்வு செய்து உறுதிசெய்தல், திட்ட செயலாக்கம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை அறிதல் மற்றும் பரிந்துரைகள் பெறுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் சேவை அளவிலான முன்னேற்றத்துக்கு 35 சதவீதம், பொது இடங்களில் தூய்மை குறித்த நேரடி கள ஆய்வு மூலம் 30 சதவீதம், கிராமப் பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் 35 சதவீதம் ஆக மொத்தம் 100 சதவீதம் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. தூய்மைக் கணக்கெடுப்புக் குழு கிராமங்களுக்கு வரும் நாளில் பொதுமக்கள் தங்கள் கருத்துரைகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். அதுமட்டுமின்றி இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ள கருத்துப்படிவம் மூலமாகவும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இந்த கணக்கெடுப்பு மூலம் தூய்மை பாரத இயக்கத்தை மக்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு செல்ல அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.