மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 805 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் துணைவேந்தர் பாஸ்கர் வழங்கினார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 805 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை துணைவேந்தர் பாஸ்கர் வழங்கினார்
பேட்டை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 805 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை துணைவேந்தர் பாஸ்கர் வழங்கினார்.
பட்டமளிப்பு விழாநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துறைகள் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கத்தில் நேற்று நடந்தது. துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி, மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முதுநிலை பட்டப்படிப்பு படித்த 409 பேருக்கும், இளநிலை ஆராய்ச்சி படிப்பை படித்த 396 பேருக்கும் என மொத்தம் 805 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் துணைவேந்தர் பாஸ்கர் பேசியதாவது:–
இன்று பட்டம் வாங்கும் மாணவர்களாகிய நீங்கள் அடுத்ததாக போட்டி நிறைந்த உலகிற்கு செல்ல இருக்கிறீர்கள். வகுப்பறையில் நீங்கள் கற்ற விஷயங்கள் சான்றிதழோடு நின்று விடப்போவதில்லை. அது நீங்கள் உயர் கல்விக்கு சென்றாலும், வேலைக்கு சென்றாலும், தொழில்முனைவோராக விரும்பினாலும் நிச்சயம் உதவும்.
சாதிக்க முடியும்நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். புதுப்புது தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் போட்டிகள் நிறைந்த உலகில் நீங்கள் பின்னுக்கு தள்ளப்படுவீர்கள்.
வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் வெற்றி பெற முடியும். எந்த துறையை நீங்கள் தேர்ந்து எடுத்தாலும் அதில் தொடர்ந்து நீங்கள் கற்றுக் கொண்ட இருக்க வேண்டும். நேர்மறையான சிந்தனையோடு இருந்தால் உங்களுடைய இலக்கு எதுவாக இருந்தாலும் நிச்சயம் உங்களால் அதை சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு வரவேற்றார். முடிவில், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுருளியாண்டி நன்றி கூறினார்.