தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சினை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம்


தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சினை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம்
x
தினத்தந்தி 2 Aug 2018 3:15 AM IST (Updated: 2 Aug 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளபட்டி பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுவதால் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சின்னாளபட்டி, 



சின்னாளபட்டி பேரூராட்சி பகுதிக்கு பேரணை மற்றும் காமராஜர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பேரூராட்சி பகுதிகளுக்கு வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், சின்னாளபட்டியை சுற்றியுள்ள காந்திகிராமம், கலிக்கம்பட்டி, செட்டியப்பட்டி, அம்பாத்துரை, பஞ்சம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தொப்பம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வெள்ளோடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்கள் இதுவரை எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

இதனால் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரை வினியோகம் செய்து வருகின்றனர். மழை காலங்களில் மட்டுமே இந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் கிடைக்கிறது. மற்ற மாதங்களில் தண்ணீர் இன்றி ஆழ்துளை கிணறுகள் வறண்டு விடுகிறது. இதனால் தண்ணீர் தேடி பொதுமக்கள் குடங்களுடன் அலைவதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் இந்த பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஊராட்சிகளிலும் தண்ணீர் சேமிக்க தொட்டிகளும், குழாய்களும் பதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதனிடையே கடும் வறட்சி காரணமாக கடந்த 3 மாதங்களாக கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. இதனால் கிராமப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. ஆழ்துளை கிணறுகளில் இருக்கிற தண்ணீர் 2 மாதங்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக தண்ணீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. வேறு வழியின்றி பொதுமக்கள் அதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.5-க்கு வாங்கி கொண்டு வீடுகளின் சேமித்து வைக்கின்றனர். இதில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த பகுதிகளில காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story