தனியார் பஸ் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் பலி 2 மாணவர்கள் படுகாயம்


தனியார் பஸ் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் பலி 2 மாணவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:15 AM IST (Updated: 2 Aug 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், தனியார் பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் பலியானார். அவருடன் ‘லிப்ட்‘ கேட்டு வந்த 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயி லாடுதுறை அருகே இளையாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பஜுருதீன் (வயது 35). பெயிண்டர். நேற்று காலை பஜுருதீன் வேலைக்காக மோட்டார் சைக்கிளில் கொள்ளிடத்தில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தார். சீர்காழி மெயின்ரோட்டில் திருநன்றியூர் பகுதியில் வந்தபோது 2 மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்காக பஜுருதீன் வந்த மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்‘ கேட்டனர்.

உடனே பஜுருதீன், அந்த மாணவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தார். சேந்தங்குடி ஆர்ச் அருகே வந்தபோது எதிரே வந்த ஒரு தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பஜுருதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும், விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 மாணவர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதுவதை டிரைவர் தவிர்த்தபோது பஸ் சாலையை விட்டு இறங்கி நின்றது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த மாணவர்கள் மயிலாடுதுறை அருகே ஆலவேலி அடைக்கலபுரம் பகுதியை சேர்ந்த வீரமணி மகன் விஜயகுமார் (15), அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விக்னேஷ் (15) என்பதும், அவர்கள் 2 பேரும் மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்ததும் தெரிய வந்தது.

Next Story