கொடைக்கானலில் குறிஞ்சி விழா 11-ந்தேதி தொடக்கம்
கொடைக்கானலில், நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளதை அடுத்து குறிஞ்சி விழா வரும் 11-ம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்செடிகள் அதிக அளவில் உள்ளன. இந்த ஆண்டு நீலக் குறிஞ்சி மலர் சீசன் தொடங்கி, பூத்து குலுங்குகின்றன. இதைத்தொடர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக குறிஞ்சி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கலந்துரையாடல் கூட்டம் கொடைக் கானல் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆர்.டி.ஓ. மோகன், தாசில்தார் பாஸ்யம், சுற்றுலா அலுவலர் உமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடைக்கானலில் தற்போது நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. இதனை கொண்டாடும் வகையில் 11-ம் தேதி குறிஞ்சி விழா தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் பிரையண்ட் பூங்காவில் புகைப்பட கண்காட்சியும் இடம்பெறும்.
மேலும் கீழ்க்குண்டாறு திட்டத்தை விரைவுபடுத்த வனத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு நடத்தப்படும். நகரில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு பணி முடிவடைந்தவுடன், அவை அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story