பேராவூரணி பகுதியில் பலத்த காற்று; 13 மரங்கள் சாய்ந்தன 46 மின்கம்பங்கள் சேதம்


பேராவூரணி பகுதியில் பலத்த காற்று; 13 மரங்கள் சாய்ந்தன 46 மின்கம்பங்கள் சேதம்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:00 AM IST (Updated: 2 Aug 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி பகுதியில் பலத்த காற்று வீசியதால் 13 மரங்கள் சாய்ந்தன. 46 மின்கம்பங்கள் சேதமடைந்தன.

பேராவூரணி,

பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை குளிர்ந்த காற்றுடன், லேசான மழை பெய்தது. சற்று நேரத்தில் பலத்த காற்று வீசியது. பலத்த காற்றினால் பேராவூரணி, ஆவணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 13 மரங்கள் சாய்ந்தன.

கொன்றைக்காடு பள்ளிக்கூடம் அருகே உள்ள மரம் சாய்ந்து விழுந்ததில் 3 மின்கம்பங்கள் கீழே விழுந்தன. அதேபோல செங்கமங்கலம் தொழிற்சாலை பகுதியின் அருகே மரக்கிளை சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் பேராவூரணி - புதுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை மேற்பார்வையாளர் நீலகண்டன் மற்றும் பணியாளர்கள் மரக்கிளையை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

பலத்த காற்றினால் பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 46 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதையடுத்து திருச்சி, தஞ்சை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு, சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்களை அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 10 மணி வரை மின்தடை ஏற்பட்டது.

காலை 10 மணிக்கு பிறகு ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே மின்வினியோகம் வழங்கப்பட்டது. மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் மிக விரைவில் மின்வினியோகம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன் தலைமையில், நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் ஜெயகுமார், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி மின் பொறியாளர் கலாவதி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்துறையினர் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story