கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த தொழிலாளி வெட்டிக்கொலை: 5 பேர் கைது


கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த தொழிலாளி வெட்டிக்கொலை: 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2018 3:30 AM IST (Updated: 2 Aug 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர், மதுரை அருகே உள்ள கறிக்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு சித்தையன்கோட்டையை சேர்ந்த ஜமால்முகமது என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில், செல்வக்குமார், முத்துப்பாண்டி, மருதுபாண்டி ஆகியோர் உள்பட 9 பேர் மீது செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் செல்வக்குமார் தான் முக்கிய குற்றவாளி ஆவார். இந்த கொலை வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து செல்வக்குமார், முத்துப்பாண்டி, மருதுபாண்டி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மோட்டார் சைக்கிளில் சொக்கலிங்கபுரத்துக்கு சென்றனர். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல், மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டது. இதையடுத்து கீழே விழுந்த செல்வக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு, அந்த கும்பல் காரில் தப்பி சென்றது. கார் மோதியதில் படுகாயம் அடைந்த முத்துப்பாண்டி, மருதுபாண்டி ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். விசாரணையில், சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சிலர் செல்வக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த கலீல் ரகுமான் (35), முகமது சலீம் (35), முகமது காலித் (23), சதீஷ்குமார் (42), கடலூர், போடிசெட்டி தெருவை சேர்ந்த சமீர் அலி (28) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கலீல் ரகுமான், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ஜமால்முகமதுவின் அண்ணன் ஆவார். இவர் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் சித்தையன்கோட்டை நகர செயலாளராக உள்ளார். சதீஷ்குமார், அதே கட்சியின் ஆத்தூர் ஒன்றிய செயலாளராக உள்ளளர். தம்பியின் சாவுக்கு பழி வாங்குவதற்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலையை கலீல் ரகுமான் அரங்கேற்றியுள்ளார். இதையடுத்து கலீல் ரகுமான் உள்பட 5 பேரையும் திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கண்மாயை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்ப்பது தொடர்பாக ஜமால்முகமது தரப்பினருக்கும், செல்வக்குமார் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் சதீஷ்குமார் செம்பட்டியில் உள்ள ஒரு கண்மாயை குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து வந்தார். அந்த கண்மாயை சுற்றி வேலி அமைத்து பராமரிக்கும் வேலையை ஜமால்முகமது தரப்பினர் செய்துள்ளனர். அந்த கண்மாய்க்கு சென்ற செல்வக்குமார் தரப்பினர், வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து செம்பட்டி டாஸ்மாக் மதுபாரில் வைத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜமால்முகமதுவை, செல்வக்குமார் தரப்பினர் வெட்டி கொலை செய்தனர். இதனால் தம்பியின் சாவுக்கு பழி வாங்கும் நோக்கில் கலீல் ரகுமான் இருந்துள்ளார். இதுகுறித்து அவருடைய நண்பர்களிடம் தெரிவித்தபோது, அவர்களும் கலீல் ரகுமானுடன் சேர்ந்து, செல்வக்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த செல்வக்குமாரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். 

Next Story