அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு கடந்த மாதம் நடைபெற்ற கலந்தாய்வில் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டன. அதில் மீதமுள்ள இடங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளது.
இந்தநிலையில் கலந்தாய்வில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது.
உற்சாக வரவேற்பு
சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் (எம்.எம்.சி.) புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டாக்டர் ஆகும் கனவு மற்றும் லட்சியங்களை சுமந்தபடி வந்த புதிய மாணவ-மாணவிகளை, மருத்துவக்கல்லூரியின் ‘சீனியர்’ மாணவ-மாணவிகள் ரோஜா மலர் கொடுத்து வாழ்த்தி வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி, உடற்கூறியல்துறை தலைவர் டாக்டர் சுதாசேஷையன், கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணபாபு உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
பின்னர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
‘ராக்கிங்’ இல்லை
சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 250 இடங்களுக்கு 225 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 25 இடங்களுக்கும் மாணவ, மாணவிகள் விரைவில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
புதிதாக வந்திருக்கும் மாணவர்களுக்கு இன்று (நேற்று) முதல் 6-ந் தேதி வரை மருத்துவம் தொடர்பான அறிவுரை மற்றும் ஆலோசனை சார்ந்த வகுப்புகள் நடைபெற இருக்கிறது. வருகிற 7-ந் தேதி முதல் அவர்களுக்கு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடங்கும். எங்கள் மருத்துவக்கல்லூரியில் ‘ராக்கிங்’ போன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை. குறைகள் மற்றும் புகார்கள் ஏதேனும் இருந்தால் மாணவர்கள் தயங்காமல் எங்களிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடமைகளை சுமந்தபடி...
முதல் நாள் வகுப்புக்கு நேற்று அதிகாலை முதலே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் மருத்துவக்கல்லூரிக்கு வந்தனர். அவர்களது உடமைகளை சுமந்தபடி பெற்றோரும் வந்தனர். தங்கள் பிள்ளைகளை கல்லூரியில் விட்டுவிட்டு பிரிய மனமின்றி அவர்கள் ஆனந்த கண்ணீருடன் சென்றனர்.
ராமநாதபுரம் உப்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அஜிதா தனது தாய், தாத்தா-பாட்டி சகிதமாக மருத்துவக்கல்லூரிக்கு வந்தார். அஜிதாவை அனைவரும் ஆசி வழங்கி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல பெரும்பாலானோர் தங்கள் உற்றார்-உறவினர்களுடன் கல்லூரிக்கு வந்தனர். புதிதாக வந்த மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பேசிக்கொண்டனர்.
இதேபோல தமிழகத்தில் உள்ள பிற அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது.
Related Tags :
Next Story