தாராபுரம் அருகே சொகுசு காரில் வந்து ஆடு திருடிய கேரள வாலிபர்கள் 5 பேர் கைது


தாராபுரம் அருகே சொகுசு காரில் வந்து ஆடு திருடிய கேரள வாலிபர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2018 4:45 AM IST (Updated: 2 Aug 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே சொகுசு காரில் வந்து ஆடு திருடிய கேரள வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்,

தாராபுரம் அருகே சொகுசு காரில் வந்து ஆடு திருடிய கேரள வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

தாராபுரம் அருகே பஞ்சப்பட்டி ரெட்டிபாளையம் அருகே சிவக்குமார் என்பவரின் பெரியதோட்டம் உள்ளது. இங்கு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சின்னான் (வயது 60) என்பவர் 2 ஆடுகளை நேற்று மேய்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சொகுசு காரில் வந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பல், காரை நிறுத்தி, அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதை பார்த்த சின்னான் சத்தம் போடவே அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த காரை மடக்கி நிறுத்தினார்கள்.

இதை தொடர்ந்து காரில் இருந்த 5 பேரையும் பிடித்து தாராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சுமேஷ் (23), பிரேம் ஜித் (வயது22), ஜினுஜோஸ் (23), பிகோ ஜோஸ் (23), ஜித்து (23) என்பதும், நண்பர்களான இவர்கள் தமிழகத்துக்கு சுற்றலா வந்துவிட்டு திரும்பும் வழியில், சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடிசென்ற போது, கையும் களவுமாக பிடிபட்டதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் வந்த கார் சுமேசுக்கு சொந்தமானது என்றும், இவர் கேரளாவில் ஆட்டுப்பண்ணை மற்றும் உயர் ரக நாய்கள் வளர்க்கும் பண்ணை வைத்துள்ளதும், பொழுது போக்குக்காக இவர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு சுற்றுலா வருவதும், திரும்பி செல்லும் போது, ஆடு போன்றவற்றை திருடிச்செல்வதையும் வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆட்டையும், சொகுசுகாரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story