பொங்கலூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் குளித்த போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் நாகராஜன்(வயது45). இவரது மகன் சூர்யா(வயது20) பொங்கலூர் அருகே அவினாசிபாளையத்தில் ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் இவர் கல்லூரிக்கு சென்றார்.
பின்னர் மாலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு அரசு பஸ்சில் புறப்பட்டார். வரும் வழியில் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் சேர்ந்து ஆண்டிபாளையம் வழியாக செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் குளிக்க சூர்யா முடிவு செய்தார். இதைதொடர்ந்து சூர்யாவுடன் 3 மாணவர்கள் ஆண்டிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, பி.ஏ.பி. வாய்க்காலுக்கு சென்றனர்.
சூர்யாவுடன் வந்த 3 மாணவர்களும் குளிக்காமல் வாய்க்கால் கரையில் நின்று கொண்டிருந்தனர். சூர்யா மட்டும் வாய்க்காலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அவர் வாய்காலின் நடுப்பகுதிக்கு சென்று குளித்த போது, தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவரை தண்ணீர் இழுத்துச்சென்றது. அவருக்கு நீச்சல் தெரியாததால், அவர் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவருடைய நண்பர்கள் சத்தம்போடவே, அங்கிருந்தவர்கள் சூர்யாவை காப்பாற்ற வாய்க்காலில் குதித்தனர்.
அதற்குள் அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதைதொடர்ந்து அவருடைய உடலை மீட்டு மேலே தூக்கி வந்தனர். பின்னர் இதுபற்றி சூர்யாவின் பெற்றோருக்கும், அவினாசிபாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து அவினாசி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story