மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 83 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது மாநகராட்சி தகவல்
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 83 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 83 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
குடிநீர் வழங்கும் ஏரிகள்
மும்பை பெருநகரத்துக்கு தானே மற்றும் நாசிக் மாவட்டங்களில் உள்ள விகார், துல்சி, தான்சா, பட்சா, மோடக்சாகர், மத்திய வைத்தர்ணா, மேல் வைத்தர்ணா ஆகிய 7 ஏரிகளில் இருந்து ராட்சத குடிநீர் குழாய் மூலம் கொண்டு வந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏரிகளில் இருந்து நாள்தோறும் மாநகராட்சி சார்பில் 3 ஆயிரத்து 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பெய்து வரும் பருவமழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார், துல்சி, தான்சா, மோடக்சாகர் ஆகிய 4 ஏரிகள் நிரம்பி விட்டன.
83 சதவீதம் இருப்பு
மும்பையின் மொத்த தேவையில் 50 சதவீதம் தண்ணீரை வழங்கும் பட்சா அணை இன்னும் நிரம்பவில்லை. கனமழை பெய்யும் பட்சத்தில் அந்த ஏரியும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 83 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், இதன் மூலம் அடுத்த 315 நாட்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியும் என்றும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தற்போது, மேற்படி 7 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு 12 லட்சத்து 55 ஆயிரத்து 597 மில்லியன் லிட்டராக உள்ளது.
அடுத்த மழைக்காலம் வரையிலும் குடிநீர் வெட்டு இல்லாமல் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் எனில் ஏரிகளில் 14 லட்சத்து 47 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story