திருப்பூரில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டத்தின் போது உணவு சமைக்க முயன்றதால் பரபரப்பு
திருப்பூரில் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது கடையின் முன்பு உணவு சமைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டு புதிய பஸ்நிலையம் அருகே உள்ள உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த கடையை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறான வகையில் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பொதுமக்கள், அனைத்து கட்சியினர், பல்வேறு அமைப்பினர் என ஏராளமானோர் அங்கு திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஒரு வாரத்திற்கு முன்பு பொதுமக்கள் மீண்டும் அந்த கடைமுன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையின்போது “ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடையை அந்த பகுதியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த கடையை அகற்றுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவில்லை. பொதுமக்கள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே அங்கு கூடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் கடை முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்று கொள்ளாமல், கலெக்டர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்ற உறுதியளிக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடை முன்பு சாமியானா பந்தல் போட்டு அங்கேயே சமைப்பதற்காக பாத்திரங்களை கொண்டு வந்தனர். பின்னர் அங்கு சமைக்காமல் ஓட்டலில் இருந்து உணவை வாங்கி வந்து மதியம் அங்கேயே சாப்பிட்டு விட்டு மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணிவரை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்
Related Tags :
Next Story