மார்த்தாண்டம் அருகே பரிதாபம் லாரி மோதி தொழிலாளி உடல் நசுங்கி சாவு நண்பர் படுகாயம்


மார்த்தாண்டம் அருகே பரிதாபம் லாரி மோதி தொழிலாளி உடல் நசுங்கி சாவு நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:30 AM IST (Updated: 2 Aug 2018 9:49 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே லாரி மோதி தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

குழித்துறை,

குமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக்குறிச்சியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 45). இவருக்கு வசந்தி (40) என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்களும் உள்ளனர். விஜயன் வீடுகளில் கிரானைட் பதிக்கும் வேலைக்கு சென்று வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் பிரிட்டோ (40), கொத்தனார். விஜயனும், பிரான்சிஸ் பிரிட்டோவும் நண்பர்கள். இதனால் இருவரும் ஒன்றாக வேலைக்கு செல்வது வழக்கம்.

நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக பிரான்சிஸ் பிரிட்டோவுடைய மோட்டார் சைக்கிளில் விஜயன் சென்றார். மோட்டார் சைக்கிளை பிரான்சிஸ் பிரிட்டோ ஓட்டினார். விஜயன் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் மார்த்தாண்டத்தை அடுத்த ஆலுவிளை பகுதியில் சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட விஜயன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பிரான்சிஸ் பிரிட்டோ படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டதாக தெரிகிறது.

இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் சாலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரான்சிஸ் பிரிட்டோவை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நிற்காமல் சென்ற லாரியை கண்டுபிடித்துள்ளனர். இருந்தாலும் லாரி யாருக்கு சொந்தமானது? எங்கு சென்றது என்ற விவரங்களை போலீசார் சேகரித்து  வருகின்றனர். விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story