கூடங்குளம் 2–வது அணு உலையிலும் திடீர் பழுது 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி பாதிப்பு; மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


கூடங்குளம் 2–வது அணு உலையிலும் திடீர் பழுது 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி பாதிப்பு; மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:00 AM IST (Updated: 2 Aug 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2–வது அணுஉலையிலும் திடீர் பழுது ஏற்பட்டதால் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

வள்ளியூர்,

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், 2–வது அணுஉலையிலும் திடீர் பழுது ஏற்பட்டதால் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

முதல் அணு உலையில் பராமரிப்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணுஉலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக நேற்றுமுன்தினம் முதல் கூடங்குளத்தின் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

2–வது அணு உலையில் திடீர் பழுது

இந்தநிலையில் 2–வது அணுஉலையில் நேற்று காலையில் நீராவி வால்வில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏற்கனவே வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக இந்த அணு உலையில் மின்உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதம் 19–ந்தேதி முதல் நிறுத்தப்பட்டு இருந்தது.

பராமரிப்பு பணிகள் முடிந்து, 152 நாட்களுக்கு பிறகு கடந்த 21–ந்தேதிதான் அணுஉலையில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது. படிப்படியாக மின்உற்பத்தி அளவு அதிகரிக்கப்பட்டு அணுஉலையில் 950 மெகாவாட் உற்பத்தி நடந்து வந்தது.

முழுஉற்பத்தி திறனான 1,000 மெகாவாட் மின்உற்பத்தி இலக்கை அடையும் முன்பு நேற்று காலையில் நீராவி வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் அணுஉலையில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

அடியோடு பாதிப்பு

இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகளும் இயங்காததால், மின்உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 1,125 மெகாவாட் மின்சாரம் தடைபட்டு உள்ளதால், மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


Next Story