நிலஅளவையாளர்கள் அடுத்த மாதம் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம்


நிலஅளவையாளர்கள் அடுத்த மாதம் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:00 AM IST (Updated: 3 Aug 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

இணையவழி பட்டா மாறுதல் பணிச்சுமையை குறைக்கக்கோரி நிலஅளவையாளர்கள் அடுத்த மாதம் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு,

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கோவை மண்டல மாநாடு ஈரோடு சோலாரில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில துணைத்தலைவர் ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் திருமலைச்சாமி, உதயக்குமார், சகாய இருதயராஜ், எஸ்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் மாநில தலைவர் காயாம்பூ, முன்னாள் மாநில தலைவர் குமாரவேல், தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்க மாநில தலைவர் குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இணைய வழி பட்டா மாறுதலில் உள்ள பணிச்சுமையை குறைக்க வேண்டும். ஆய்வாளர் தலைமையில் ஊதியம் வழங்கும் அதிகாரத்துடன் திட்டப்பணி அலுவலகம் தொடங்க வேண்டும். தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் முன்மொழிவுகளை முற்றிலும் கைவிட வேண்டும்.

களப்பணியாளர்களின் உரிமை மற்றும் உயர் பதவிகளான இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் பதவிகளை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். 2017-2018 ஆம் ஆண்டு துணை ஆய்வாளர் தேர்வு பட்டியலில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு ஊழியர்களுக்கு துணை ஆய்வாளர் பதவி வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாதம்(ஆகஸ்டு) கடைசி வாரத்தில் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்தும், செப்டம்பர் மாதத்தில் 3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தும் போராட்டத்தில் ஈடுபடுவது. இதுதொடர்பாக வருகிற 19-ந் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் திரளாக கலந்துகொள்ள வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிப்பின் மாநில துணைத்தலைவர் அண்ணாகுபேரன், செயலாளர் எஸ்.முருகேசன், மாவட்ட தலைவர்கள் ராஜேஷ், நடராஜன், ஜாகீர்உசேன், பெரியசாமி உள்பட ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிலஅளவையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாநில செயலாளர் நிமலன் கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் டி.சக்திவேல் நன்றி கூறினார்.

Next Story