மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 88 பேர் கைது


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 88 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2018 3:00 AM IST (Updated: 3 Aug 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

8 வழி பசுமை சாலையை கைவிடக்கோரி நள்ளிரவில் நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 88 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,


சென்னை - சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை 170 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் நடைபயணத்திற்கு ஆயத்தமாகினர். இந்த நடைபயணத்திற்கு போலீசார் தடை விதித்தனர். போலீசாரின் தடையை மீறி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.


இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 395 பேரை போலீசார் கைது செய்து, திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தவர்களை போலீசார் விடுவித்தனர். அப்போது மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் மீண்டும் நடைபயணத்தை தொடங்கினர். இதனால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மீண்டும் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


இதனையடுத்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 88 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், 8 வழி பசுமை சாலை திட்டத்தினால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. இந்த திட்டம் கார்ப்பரேட் காரர்களுக்காக தான் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் போன்றவை வரும் என்று வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர்.


நடைபயணத்திற்கு அனுமதிக்கோரி நாங்கள் விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மேலும் இந்த திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த சாலை அமைய உள்ள மாவட்டங்களில் சட்ட உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. எங்களிடம் உள்ள வக்கீல்கள் மூலம் எந்தவித செலவும் இன்றி சட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது’ என்றார். 


Next Story