கிராமங்களின் தூய்மை நிலை பற்றி கணக்கெடுக்க மத்திய குழு வருகிறது


கிராமங்களின் தூய்மை நிலை பற்றி கணக்கெடுக்க மத்திய குழு வருகிறது
x
தினத்தந்தி 2 Aug 2018 9:30 PM GMT (Updated: 2 Aug 2018 7:24 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் தூய்மை நிலை பற்றி கணக்கெடுப்பதற்காக மத்திய அரசின் ஆய்வுக்குழு கடலூர் மாவட்டத்துக்கு வர உள்ளதாக கலெக்டர் தண்டபாணி தெரிவித்தார்.

கடலூர்,



மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுகாதார கட்டமைப்பில் முன்னேற்றம் அடைந்த மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் அடைந்த முன்னேற்றம் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் சிறந்த மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அக்டோபர் மாதம் 2-ந்தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், மாவட்ட மகளிர் திட்ட அதிகாரி காஞ்சனா, கிராம பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தூய்மை கணக்கெடுப்பு பற்றிய சின்னத்தை வெளியிட்டு கலெக்டர் தண்டபாணி பேசுகையில், திருச்சி மாநகராட்சி ஆணையாளராக அவர் பணியாற்றிய போது தூய்மைக்கான விருதை திருச்சி மாநகராட்சி பெற்றது பற்றி நினைவு கூர்ந்ததோடு, அதற்காக அவர் எடுத்த முயற்சிகளை விளக்கிக்கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் 683 ஊராட்சிகளும், 2,243 குடியிருப்புகளும் உள்ளன. கிராமப்புறங்களின் தூய்மை மற்றும் சுகாதார நிலை பற்றி கணக்கெடுப்பதற்காக இம்மாதம் மத்திய அரசின் ஆய்வுக்குழு கடலூர் மாவட்டத்துக்கு வருகிறது. அவர்கள் எப்போது வருவார்கள்? எந்த கிராமத்துக்கு வருவார்கள் என்பது தெரியாது. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், சுற்றுலா தலங்கள், கடைத்தெருக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண் டும். சமுதாய கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

பள்ளிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து குப்பை தொட்டிகளில் போடுவது மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரிப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 2 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை வாங்கிக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் போதுமான எண்ணிக்கையில் கழிப்பறை இல்லையெனில் திறந்தவெளியில் மாணவர்கள் சிறுநீர் கழிப்பார்கள். எனவே பள்ளிகளில் இடைவெளி விடும் நேரத்தை வகுப்புவாரியாக மாற்றி அமைக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன் ஊராட்சியின் சுற்றுப்புறச் சூழல்களையும் தூய்மையாக பராமரித்து கடலூர் மாவட்டம் தமிழகத்திலேயே தூய்மையில் முதன்மை மாவட்டமாக திகழ ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தண்டபாணி பேசினார்.

கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, சமூக நல அலுவலர் அன்பழகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story