ஆடிப்பெருக்கு விழா களை கட்டியது: காதோலை-கருகமணி, பேரிக்காய், விளாம்பழம் விற்பனை மும்முரம்


ஆடிப்பெருக்கு விழா களை கட்டியது: காதோலை-கருகமணி, பேரிக்காய், விளாம்பழம் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:00 AM IST (Updated: 3 Aug 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூருக்கு காவிரி நீர் வந்தடைந்ததால் ஆடிப்பெருக்கு விழா களை கட்டியது. திருவாரூரில் காதோலை-கருகமணி, பேரிக்காய், விளாம்பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் திகழ்ந்து வருகிறது. இதில் உணவு உற்பத்தியில் திருவாரூர் மாவட்டம் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர் திருவாரூரை வந்தடையாததால் பம்பு செட், குளங்களில் ஆடிப்பெருக்கினை கொண்டாடியதால் விழா களை இழந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று அடைந்துள்ளது.

இதனால் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாப்படுகிறது. இதனை தொடர்ந்து விவசாயிகள் உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து வரும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் ஆடிப்பெருக்கு விழா களை கட்டியுள்ளது. திருவாரூர் கடைவீதி உள்பட பல்வேறு பகுதிகளில் காதோலை-கருகமணி, மஞ்சள், பேரிக்காய், விளாம்பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story