இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கியது அம்பலம்
கச்சிராயப்பாளையம் அருகே இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, தீர்த்துக்கட்டும் முன் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் சிலர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவர்கள் கிணற்றின் அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது கிணற்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சண்முகம், கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், மாணிக்கராஜா ஆகியோர் விரைந்து வந்து கிணற்றில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, அங்கிருந்தவர் களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்து கிடந்தது கச்சிராயப்பாளையம் அருகே உள்ள வடக்கநந்தல் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் என்பதும், கடந்த 28-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளம்பெண்ணின் காதலனான அதே பகுதியை சேர்ந்த குணசேகரனிடம்(28) போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், நானும் எங்கள் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த 28-ந் தேதி இரவு செல்போனில் தொடர்பு கொண்ட அவர், தனது வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளி பகுதிக்கு வருமாறு கூறினார். உடனே நான் அங்கு சென்று காத்திருந்தேன்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர் வந்ததும் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர், நான் வீட்டில் இருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்து வந்துள்ளேன். நாம் கேரளாவுக்கு சென்று திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதால் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை அங்கிருந்த கிணற்றில் வீசினேன் என்றார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர்.
இதற்கிடையே நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி ஆகியோர் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்து குணசேகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். போலீசாரிடம் அவர் கூறுகையில், கடந்த 28-ந் தேதி இரவு என்னுடைய காதலி செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததும் நான் எனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கோமுகிதாசன்(22), சக்திவேல் மகன் ரட்சகன்(22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோருடன் செல்வராஜ் என்பவரது விளை நிலத்துக்கு சென்றேன்.
அவர் வந்ததும் எனது நண்பர்கள் அங்கிருந்த தென்னந்தோப்புக்குள் மறைந்து கொண்டனர். பின்னர் நான் எனது காதலியுடன் அந்த தென்னந்தோப்பில் உல்லாசமாக இருந்தேன். இதை என்னுடைய நண்பர்கள் மறைந்திருந்து பார்த்தனர். அப்போது கோமுகிதாசனும், ரட்சகனும் வந்து நாங்களும் உல்லாசமாக இருக்க விரும்புவதாக கூறினர். அதற்கு சம்மதம் தெரிவித்த நான், எனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு என்னுடைய காதலியிடம் கூறினேன். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் கோமுகிதாசனும், ரட்சகனும் அவரை கற்பழித்தனர். பின்னர் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருமணம் செய்து கொள்ள விரும்பாத நான் கோமுகிதாசன், ரட்சகனுடன் சேர்ந்து துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தோம்.
இதையடுத்து நாங்கள் 4 பேரும் அவரது உடலை அங்கிருந்த கிணற்றில் வீசினோம். பின்னர் அவர் கொண்டு வந்திருந்த ரூ.20 ஆயிரத்தை வீட்டுக்கு எடுத்து வந்து நாங்கள் 4 பேரும் செலவு செய்தோம். ஆனால் போலீசாரின் விசாரணையில் சிக்கி கொண்டேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் வெளியூர் தப்பி செல்வதற்காக கச்சிராயப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோமுகிதாசன், ரட்சகன் மற்றும் 16 வயது சிறுவனை இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story