கர்நாடகத்தில், 29-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் 10-ந் தேதி தொடங்குகிறது
கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் சீனிவாச ஆச்சாரி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து அவர் கூறியதாவது:-
105 நகர உள்ளாட்சி அமைப்புகள்
கடந்த 2013-ம் ஆண்டு மாநிலத்தில் 208 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இவைகளின் பதவி காலம் வருகிற செப்டம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் வரை வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது. இதில் முதல் கட்டமாக 108 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளோம். இவற்றில் சிவமொக்கா, துமகூரு, மைசூரு ஆகிய 3 மாநகராட்சிகளும் அடங்கும்.
இதில் 3 மாநகராட்சிகளின் வார்டு சீரமைப்பு தொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதனால் அந்த 3 மாநகராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது. மீதமுள்ள 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடை பெறும். இதற்கான அரசாணையை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் வருகிற 10-ந் தேதி பிறப்பிப்பார்கள்.
29-ந் தேதி ஓட்டுப்பதிவு
அன்றைய தேதி முதலே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 17-ந் தேதி கடைசி நாள் ஆகும். 18-ந் தேதி மனுக்கள் பரிசீலனையும், மனுக்களை வாபஸ் பெற 20-ந் தேதியும் கடைசி நாள் ஆகும். 29-ந் தேதி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். தேவைப்படும் பட்சத்தில் மறுவாக்குப்பதிவு 31-ந் தேதி நடைபெறும்.
செப்டம்பர் மாதம் 1-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்றைய தினமே தேர்தல் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துவிட்டன. இந்த நடத்தை விதிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
2-ம் கட்ட தேர்தலில்...
அதாவது 29 நகரசபைகள், 53 புரசபைகள், 23 பட்டண பஞ்சாயத்துகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த முதல் கட்ட தேர்தல் பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர், ராமநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், தார்வார், சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் நடக்கவில்லை. இந்த மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் 2-ம் கட்ட தேர்தலில் வருகின்றன.
இந்த 105 நகர உள்ளாட்சி அமைப்புகளில் 2,574 வார்டுகள் இருக்கின்றன. இவற்றில் நகரசபைகளில் 927 வார்டுகளும், புரசபைகளில் 1,247 வார்டுகளும், பட்டண பஞ்சாயத்துகளில் 400 வார்டுகளும் உள்ளன. இந்த 105 உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 36 லட்சத்து 3 ஆயிரத்து 691 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 17 லட்சத்து 96 ஆயிரத்து 1 பேரும், பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 7 ஆயிரத்து 336 பேரும், 3-ம் பாலினத்தினர் 354 பேரும் அடங்குவர்.
இட ஒதுக்கீட்டு அரசாணை
இதில் நகரசபைகளில் 20 லட்சத்து 6 ஆயிரத்து 708 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 94 ஆயிரத்து 754 பேரும், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 11 ஆயிரத்து 711 பேரும், 3-ம் பாலினத்தினர் 243 பேரும் உள்ளனர். புரசபைகளில் மொத்தம் உள்ள 12 லட்சத்து 76 ஆயிரத்து 254 வாக்காளர்களில் ஆண்கள் 6 லட்சத்து 41 ஆயிரத்து 799 பேரும், பெண்கள் 6 லட்சத்து 34 ஆயிரத்து 358 பேரும், 3-ம் பாலினத்தினர் 97 பேரும் உள்ளனர். பட்டண பஞ்சாயத்துகளில் மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரத்து 729 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 448 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 267 பேரும், 3-ம் பாலினத்தினர் 14 பேரும் அடங்குவர்.
இந்த 105 உள்ளாட்சி அமைப்புகளில் 3 ஆயிரத்து 897 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நகரசபைகளில் 2,067 வாக்குச்சாவடிகளும், புரசபைகளில் 1,422 வாக்குச்சாவடிகளும், பட்டண பஞ்சாயத்துகளில் 408 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் இந்த பகுதிகளில் இட ஒதுக்கீட்டு அரசாணையை மாநில அரசு பிறப்பித்துள்ளது. அந்த அரசாணை எங்களுக்கு கிடைத்துள்ளது.
சிறப்பு பார்வையாளர்கள்
இந்த தேர்தலில் முறைகேடுகளை தடுக்க 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களாக 25 கே.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடக கணக்கு தணிக்கை துறையை சேர்ந்த 30 அதிகாரிகள் தேர்தல் கணக்குகளை கவனிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் 36 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 4,640 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 4,940 வாக்குப்பதிவு எந்திர கட்டுப்பாட்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நகரசபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.2 லட்சம் வரையிலும், புரசபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.1.50 லட்சம் வரையிலும், பட்டண பஞ்சாயத்துகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் செலவு செய்ய அனுமதிக்கப்படும்.
வேட்பாளர்களின் புகைப்படங்கள்
இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் முறையாக நோட்டா வசதி சேர்க்கப்படும். வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம் பெறும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை போலவே இந்த முறை இந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களின் சொத்து விவர படிவங்கள் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் சொத்து விவரங்கள் பெறப்படும்.
தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர் கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தினேன். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story