மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2018 2:31 AM IST (Updated: 3 Aug 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கும் மோட்டார்சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தது. மேலும் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நகை பறிப்பு சம்பவங்களும் நடைபெற்று வந்தது. இதையடுத்து போரூர் உதவி கமிஷனர் சந்திரசேகரன், குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து இரவு நேரங்களில் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

முகப்பு விளக்கு இல்லாமல் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். மேலும் மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

கைது

விசாரணையில் அவர்கள் குன்றத்தூர், மூன்றாம் கட்டளையை சேர்ந்த சரவணன் (வயது 21), போரூரை சேர்ந்த பார்த்திபன் (21), என்பதும், இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் மோட்டார்சைக்கிள்களை திருடுவது மற்றும் தங்களின் அடையாளம் தெரியாமல் இருக்க மோட்டார்சைக்கிளின் முகப்பு விளக்குகளை எடுத்து விட்டு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

Next Story