அரசு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்துக்கு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை முறைகேடாக மாற்றியதாக அரசு பஸ் கண்டக்டர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேடசந்தூர் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் அழகேசன். இவர் திண்டுக்கல் அரசு போக்குவரத்துக்கழக 3-வது பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.
அந்த சமயத்தில், போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் வசூலான பணத்தை, அழகேசன் வங்கியில் செலுத்தியுள்ளார். ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக, கண்டக்டரே வங்கியில் பணத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.
அவர் தொடர்ந்து 5 நாட்கள் வங்கியில் பணம் செலுத்தியுள்ளார். அவை அனைத்தும் 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்துள்ளது. அழகேசன், டிக்கெட்டுகள் மூலம் வசூலான பணத்தை தனக்கு தெரிந்தவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்களிடம் இருந்து 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்கி முறைகேடாக வங்கியில் செலுத்தி மாற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கியில் செலுத்தி உள்ளார். இதுகுறித்து, ஒருவர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அழகேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த சம்பவம் நடந்தபோது, பணியில் இருந்தும் இதனை கண்காணிக்காததால், அப்போதைய கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி, மேலாளர் பாலுச்சாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் வெள்ளைச்சாமி பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பாலுச்சாமி தற்போது, பழனி பஸ் நிலைய மேலாளராக பணியில் உள்ளார். இதே புகார் தொடர்பாக அழகேசன், கடந்த ஆண்டு ஒரு மாதம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story