மதுரையில் நடந்த அதிரடி சோதனை இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3¼ கோடி தங்கம் சிக்கியது 3 பேர் கைது-பரபரப்பு தகவல்


மதுரையில் நடந்த அதிரடி சோதனை இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3¼ கோடி தங்கம் சிக்கியது 3 பேர் கைது-பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2018 5:15 AM IST (Updated: 3 Aug 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்த ரூ.3¼ கோடி கடத்தல் தங்கத்தை அரசு பஸ்சில் இருக்கைக்கு அடியே மறைத்து மதுரைக்கு எடுத்து வந்த போது, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இலங்கையில் இருந்து சென்னை, மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன. இதன் தொடர்ச்சியாக இலங்கையில் இருந்து சென்னை, மதுரைக்கு வரும் விமான பயணிகளிடம் தீவிர சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் தங்கம் பிடிபட்டது.

விமான நிலையங்களில் அதிகாரிகளின் கெடுபிடியை தொடர்ந்து, கடத்தல் காரர்கள் கடல் வழியாக தங்கம் கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதிகளான ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்ட பம், வேதாளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடலோர காவல் படையினர், கியூ பிரிவு போலீசார், சுங்கத்துறையினர், தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்களது சோதனையில் இதுவரை தங்கம் சிக்கியதில்லை.

இந்தநிலையில் இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வந்துள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் ராமநாதபுரம் வந்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்சில் கடத்தல் தங்கம் கொண்டு செல்லப்படுவதாகவும் கூடுதல் தகவல் கிடைத்தது.

எனவே மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு, ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் ஒரு அரசு பஸ்சை வழிமறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதித்து பார்த்தனர். அப்போது பஸ்சின் இருக்கைக்கு அடியில் தங்கம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தங்கத்தை பதுக்கிய 3 பேரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவர்கள் அன்வர் (வயது 24), பைசல், ஹக் ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் அவரிகளிடம் இருந்து மொத்தம் ரூ.3 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள 11.15 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக கைதானவர்களிடம் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதனால் தான் தற்போது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கையில் இருந்து தமிழகம் வரும் விமானங்களில் கடத்தல் தங்கம் பிடிப்படுகிறது.

எனவே கடத்தல்காரர்கள் விமானத்திற்கு பதிலாக தற்போது கடல் மார்க்கத்தை தேர்ந்தெடுத்து தங்கம் கடத்துகின்றனர். பொதுவாக விமானம் மூலம் கடத்தப்படும் தங்கம் ஆபரணங்களாகவும், பல்வேறு வடிவத்திலும் இருக்கும். ஆனால் கடல் வழியாக தங்கத்தை தங்கக்கட்டிகளாக தான் கடத்துவார்கள். ஆனால் தற்போது மதுரையில் பிடிப்பட்ட இந்த தங்கம் தகடுகளாவும், சின்ன வளையங்களாவும் சிக்கி உள்ளன. எங்களது முதல்கட்ட விசாரணையில், விமானம் மூலம் கடத்துவதற்காக வைத்திருந்த தங்கத்தையே கடல் வழியாக கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. கடத்தல்காரர்களின் முழு பின்னணியை மத்திய அதிகாரிகள் புலனாய்வு செய்து வைத்திருப்பதாலேயே மதுரையில் தங்கம் சிக்கி உள்ளது. இது அதிகாரிகளுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story