குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் கிராம மக்கள்


குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 4 Aug 2018 3:15 AM IST (Updated: 3 Aug 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கண்டமனூர்,


ஆண்டிப்பட்டி அருகே பழைய கோட்டை ஊராட்சியில் வண்டியூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

பின்னர் அது நிறுத்தப்பட்டது. இதையடுத்து வேலப்பர் கோவில் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த ஊரில் 13 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து தண்ணீர் கிடைப்பதில்லை. சில ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வரும் ஆழ்துளை கிணறு பகுதியில் உள்ள குழாய்களில் குறைந்த அளவே குடிநீர் கிடைப்பதால் காலிக்குடங்களுடன் நீண்டநேரம் கிராமமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் வேலப்பர் கோவில் பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் குழாய்கள் முறைகேடாக இணைப்பு கொடுத்து விவசாய நிலங்களுக்கு சிலர் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எபி தலைமையில் அதிகாரிகள் வண்டியூரில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது வேலப்பர் கோவிலில் இருந்து வரும் குழாய்களில் முறைகேடாக இணைப்பு இருப்பதை கண்டறிந்தனர். அதனை அதிகாரிகள் அகற்றினர். அப்போது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வண்டியூரில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அவர் பார்வையிட்டார். அந்த ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முடிந்ததும், அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். 

Next Story