மயிலாப்பூரில் வங்கி மேலாளரிடம் ஐபோனுக்கு பதிலாக சோப்பு கொடுத்து மோசடி


மயிலாப்பூரில் வங்கி மேலாளரிடம் ஐபோனுக்கு பதிலாக சோப்பு கொடுத்து மோசடி
x
தினத்தந்தி 3 Aug 2018 4:45 AM IST (Updated: 3 Aug 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூரில் வங்கி மேலாளரிடம், குறைந்த விலைக்கு ஐபோன் தருவதாகக்கூறி, துணி துவைக்கும் சோப்பு கொடுத்து 2 பேர் மோசடி செய்தனர்.

அடையாறு,

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36). இவர் லஸ் சர்ச் சாலையில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வங்கியில் இருந்தபோது ‘டிப்-டாப்’ ஆசாமிகள் 2 பேர் வங்கிக்கு வந்தனர்.

அவர்கள் ரமேசிடம், தாங்கள் விலை உயர்ந்த ஐபோன்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம். உங்களுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஐபோனை ரூ.15 ஆயிரத்துக்கு தருகிறோம் என ஆசைவார்த்தைகள் கூறினர். மேலும், அருகில் உள்ள ஒரு வங்கியில் தற்போது தான் 2 ஐபோன்களை விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர். இவர்களின் பேச்சை நம்பிய ரமேஷ் ரூ.15 ஆயிரம் கொடுத்து ஒரு ஐபோன் கேட்டார்.

2 பேருக்கு வலைவீச்சு

இதைத்தொடர்ந்து அவரிடம் ஐபோன் இருப்பதாக கூறி ஒரு செல்போன் பெட்டியை கொடுத்து விட்டு, மர்மஆசாமிகள் 2 பேரும் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டனர்.

சிறிதுநேரம் கழித்து அந்த பெட்டியை பிரித்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், ஐபோனுக்கு பதிலாக துணி துவைக்கும் சோப்பு இருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதையடுத்து அவர் மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நேற்று வங்கிக்கு சென்ற போலீசார் அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த 2 பேரின் உருவங்களை வைத்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story