எக்ஸ்பிரஸ் வழித்தட பயணத்துக்கு தடை: மின்சார ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி
எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடத்தில் விரைவு மின்சார ரெயில்கள் இயக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கமான மின்சார ரெயில்கள் புறப்பட தாமதம் ஏற்படுகிறது.
சென்னை,
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி, மின்சார ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த 5 வாலிபர்கள் அங்குள்ள கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி பலியானார்கள். இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 24-ந்தேதி முதல் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் விரைவு மின்சார ரெயில்கள் கடந்த 10 நாட்களாக இயக்கப்படுவது இல்லை. இதனால் குறிப்பிட்ட நிறுத்தங்கள் மட்டுமே நின்று செல்லும் விரைவு மின்சார ரெயில்களை நம்பியிருந்த பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் செல்ல தடை
எக்ஸ்பிரஸ் வழித்தட பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, விரைவு மின்சார ரெயில்கள் சாதாரண மின்சார ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான மின்சார ரெயில்கள் புறப்படும் நேரத்தை வெகுவாக பாதிக்கிறது.
பொதுவாகவே காலை நேரத்தில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு பாதை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு, அதற்கு தகுந்தாற்போலத்தான் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கவேண்டிய நெருக்கடி மற்றும் அவ்வப்போது ஏற்படும் சிக்னல் கோளாறுகள் போன்றவற்றால் தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் செங்கல்பட்டு, திருமால்பூரில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களும் தாமதமாகவேபுறப்படுகின்றன.
மின்சார ரெயில்கள்
சென்னை புறநகர் பகுதிகளில் தான் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இதனால் நகர் பகுதிகளில் இருக்கும் அலுவலகங்கள், கம்பெனிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு சென்றுவர பஸ்களை காட்டிலும் மின்சார ரெயில்களை தான் அதிகம் நம்பி இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு மின்சார ரெயில்களால் தான் வாழ்க்கை ஓட்டமே இருக்கிறது.
அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் அலுவலகங்களுக்கு வேலைநேரம் காலை 10 மணிக்கு தான் தொடங்குகிறது. இதில் பல அலுவலகங்கள் பணியாளர்கள் பிரச்சினையை கருத்தில்கொண்டு ‘கிரேஸ் டைம்’ எனும் தன்மையை பின்பற்றுகிறார்கள். அதாவது ஒரு சில நிமிட தாமதத்தை (உரிய காரணமாக இருந்தால்) ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் ஏராளமான அலுவலகங்கள் அதை கண்டிப்புடன் பின்பற்றுகின்றன. 10 மணி தாண்டி ஒரு நிமிடம் தாமதமானாலும் அரை நாள் விடுப்பு போடும் அலுவலகங்கள், கம்பெனிகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக பெரிய பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் இதை உறுதியுடன் பின்பற்றுகின்றன.
பயணிகள் தவிப்பு
இதனால் காலையில் சாப்பிடுகிறோமோ, இல்லையோ 10 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் நடைமேடையில் காத்திருக்கும் பயணிகளுக்கு, மின்சார ரெயில் தாமதம் கடும் சோதனையை ஏற்படுத்தி விடுகிறது. தாமதத்துக்கு இடையில் கடும் கூட்ட நெரிசலுடன் ரெயில் வந்தாலும், வேறு வழியின்றி அதில் ஏறி செல்கிறார்கள். சிலர் ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கியபடியும் பயணம் செய்கிறார்கள்.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. விரைவு மின்சார ரெயில்கள் இல்லாததால் கடந்த சில நாட்களாக கடும் தவிப்புக்கு இடையே பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:-
பாதுகாப்பு நடவடிக்கை
பரங்கிமலை சம்பவத்தை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது கிடையாது. பயணிகள் பாதுகாப்பை கருத்தில்கொள்ளும் ரெயில்வே நிர்வாகம், எங்கள் தவிப்பையும், மன உளைச்சலையும் ஏன் புரிந்துகொள்ளவில்லை?. மின்சார ரெயில் தாமதத்தால் குறித்த நேரத்தில் அலுவலகத்துக்கு செல்வதே குதிரைகொம்பாக உள்ளது. விரைவாக செல்ல எண்ணி பதற்றத்துடன் அலுவலகம் சென்று பணியில் தவறு செய்துவிடுகிறோம்.
இதனால் வேறுவழியின்றி ரெயிலை மறித்து எங்கள் உணர்வுகளை தெரியப்படுத்த வேண்டி உள்ளது. எனவே பயணிகள் நலனை கருத்தில்கொண்டு எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எக்ஸ்பிரஸ் ரெயில் தடத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story